மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி கலெக்டர் தொடங்கி வைத்தார்


மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 30 Oct 2018 10:00 PM GMT (Updated: 30 Oct 2018 11:02 PM GMT)

வேலூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டியை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

வேலூர், 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வேலூர் பிரிவு சார்பில் வேலூர்நேதாஜி விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் கலந்து கொண்டு விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடகள போட்டி மற்றும் குழுப்போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக நடத்தப்பட்டது. கை, கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாதோர் என 4 பிரிவுகளாக போட்டிகள் நடந்தது.

தடகளப்போட்டியில் 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டம், சாப்ட் பந்து எறிதல், 400 மீட்டர் சக்கர நாற்காலி ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. அதேபோன்று இறகுப்பந்து, அடாப்ட் வாலிபால், எறிப்பந்து, கபடி ஆகிய குழு போட்டிகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டது. 400 ஆண்கள், 200 பெண்கள் என மொத்தம் 600 பேர் கலந்துகொண்டனர்.

இதில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story