மணப்பாறை அருகே போலீசாரை கண்டித்து வேன் டிரைவர்கள் சாலை மறியல்


மணப்பாறை அருகே போலீசாரை கண்டித்து வேன் டிரைவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 31 Oct 2018 4:00 AM IST (Updated: 31 Oct 2018 5:01 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே நெடுஞ்சாலை ரோந்து போலீசாரை கண்டித்து வேன் டிரைவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புகழ்பெற்ற மாட்டு சந்தை உள்ளது. இந்த சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை மதியம் வரை நடைபெறும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து வாகனங்களில் ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வரும். நேற்று மதியம் நடைபெற்ற சந்தையில், விற்பனைக்காக 2 ஜல்லிக்கட்டு காளைகளை வேனில் ஏற்றி கொண்டுவந்தனர். அந்த வேன் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வேனை நிறுத்தினர். மேலும் டிரைவரிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது டிரைவர் 50 ரூபாய் கொடுத்ததாகவும், அதை ரோந்து வேனில் இருந்த போலீசார் ஒருவர் வாங்கி கிழித்து வீசியதாகவும், மேலும் கத்தியை எடுத்து வேனில் இருந்த ஜல்லிக்கட்டு காளையின் கயிற்றை வெட்டி விட்டதால் காளை அவிழ்த்து கொண்டு ஓடி விட்டது.

எனவே சம்பந்தப்பட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஒரு ஜல்லிக்கட்டு காளை யுடன் வேனை சாலையில் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக மாடுகளை ஏற்றி வந்த மற்ற வேன் டிரைவர்களும் ஆதரவு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டதோடு, ஒவ்வொரு வாரமும் இதே போன்று தான் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் குற்றம்சாட்டி நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மறியலை கைவிட மறுத்து டிரைவர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மணப்பாறை இன்ஸ்பெக்டர் மனோகரன் உயரதிகாரிகளின் கவனத்திற்கு இந்த சம்பவத்தை கொண்டு செல்வதுடன், தங்களின் கோரிக்கை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும், மறியலை கைவிடுமாறும் கூறினார். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story