‘மீ டூ’ இயக்கத்தில் குமாரசாமி விரைவில் சிக்குவார் : குமார் பங்காரப்பா எம்.எல்.ஏ. பேட்டி


‘மீ டூ’ இயக்கத்தில் குமாரசாமி விரைவில் சிக்குவார் : குமார் பங்காரப்பா எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 30 Oct 2018 11:34 PM GMT (Updated: 30 Oct 2018 11:34 PM GMT)

‘மீடூ‘ இயக்கத்தில் குமாரசாமி விரைவில் சிக்குவார் என்றும், பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து பேசுவார்கள் என்றும் குமார் பங்காரப்பா பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

பெங்களூரு,

பா.ஜனதா கட்சியை சேர்ந்த குமார் பங்காரப்பா எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் ‘மீடூ‘ இயக்கம் மூலம் தங்களுக்கு நேர்ந்த சம்பவங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். இது பெண்கள், ஆண்கள் என இருவருக்கும் பொருந்தும். இந்த ‘மீடூ‘ இயக்கத்தில் குமாரசாமி விரைவில் சிக்குவார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து பேசுவார்கள். முதல்-மந்திரி குமாரசாமி பொய் பேசுகிறார். அவர் உணர்வுப்பூர்வமாக பேசி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மக்களை ஏமாற்றுகிறார்.

சிவமொக்காவுக்கு வரும்போது மட்டும் குமாரசாமி, பங்காரப்பாவின் பெயரை பயன்படுத்தி உணர்ச்சிப்பூர்வமாக பேசுகிறார். பங்காரப்பா காவிரி நீருக்காக போராடினார். அவரது பெயரை மண்டியா, ராமநகரில் ஏன் பயன்படுத்துவது இல்லை. ராமநகரில், உங்கள் வீட்டு பிள்ளை என்று மனைவிக்காக குமாரசாமி பிரசாரம் செய்கிறார். அங்கு பங்காரப்பா என்று பெயரை சொல்லி ஓட்டு கேளுங்கள் பார்ப்போம்.

மண்டியாவில் பேசும்போது கண்ணீர் விடும் குமாரசாமி, இங்கு வந்து பங்காரப்பாவுக்கு பா.ஜனதா அநீதி இழைத்துவிட்டதாக கூறுகிறார். மது பங்காரப்பாவை வெற்றி பெற செய்தால், அவரை மந்திரியாக்குவதாக குமாரசாமி பொய்யான வாக்குறுதியை வாக்காளர்களிடம் கூறுகிறார். இவ்வாறு பேசி மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, சிவமொக்காவுக்கு எவ்வளவு நிதி கொடுப்பீர்கள் என்று குமாரசாமி சொல்ல வேண்டும்.

பெரிய தலைவரின் மகன் என்று சொல்லிக்கொண்டு மது பங்காரப்பா சுற்றுகிறார். ஆனால் பங்காரப்பாவின் நினைவகம் அமைக்க அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

பா.ஜனதா சார்பில் நினைவகம் அமைப்பதற்காக நாங்கள் முயற்சி எடுத்தோம். கடந்த நாடாளுமன்ற பொதுதேர்தலின்போது, கீதா சிவராஜ்குமாரை குமாரசாமி அழைத்து வந்து சிவமொக்கா தொகுதியில் நிறுத்தினார். இப்போது அவர் எங்கே போனார்?. வெளிநாட்டில் இருந்த மது பங்காரப்பாவை திடீரென அழைத்து வந்து சிவமொக்கா இடைத்தேர்தலில் குமாரசாமி நிறுத்தியுள்ளார்.

இவ்வாறு குமார் பங்காரப்பா கூறினார்.

Next Story