ஜெயந்தி விழாவையொட்டி முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு


ஜெயந்தி விழாவையொட்டி முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 31 Oct 2018 5:05 AM IST (Updated: 31 Oct 2018 5:05 AM IST)
t-max-icont-min-icon

பசும்பொன் முத்துராமலிங்கதேவர் ஜெயந்தி விழாவையொட்டி, திருச்சியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து வணங்கினர்.

திருச்சி,

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நேற்று திருச்சியில் கொண்டாடப்பட்டது. அதையொட்டி, திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள அவரது உருவச்சிலை முன்பு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மாநில செயலாளர் வெங்கடேசன் தலைமையில் காலை 7 மணிக்கு ஹோமம் வளர்த்து சிறப்பு ஆராதனை நடந்தது.

தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் முத்துராமலிங்கதேவர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அனைவரும் வணங்கினர். நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் முருகையா தேவர், பொருளாளர் முருகன், புறநகர் மாவட்ட இணை செயலாளர் ரவிசங்கர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாநகர் மாவட்ட செயலாளர் குமார் எம்.பி. ஆகியோர் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர். இதில் ஆவின் தலைவர் கார்த்திகேயன் மற்றும் மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமையில், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஸ்டாலின்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், மாநகர செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் குமரி அனந்தன் சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் ஜவகர்(மாநகர்), கோவிந்தராஜ்(தெற்கு), கலைச்செல்வன்(வடக்கு) மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தங்க ராஜைய்யன் தலைமையில், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

த.மா.கா. சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் நந்தா செந்தில்வேல் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் கே.டி.தனபால் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அவைத்தலைவர் அலங்கராஜ், பொருளாளர் மில்டன்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மாநகர் மாவட்ட செயலாளர் திலீப்குமார், மாவட்ட தலைவர் வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் முத்துராமலிங்கதேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மாநில அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், அவைத்தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் மண்டல செயலாளர் சேதுமனோகரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதுபோல ம.தி.மு.க. சார்பில் மாநகர செயலாளர் வெல்லமண்டி சோமு தலைமையில் மாலை அணிவித்தனர். இதில் புறநகர் மாவட்ட செயலாளர் சேரன், பகுதி செயலாளர்கள் பிரபாகரன், மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்ணா திராவிடர் கழகம்(திவாகரன் அணி) சார்பில் மாநில அமைப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் அவைத்தலைவர் வாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி நாடார் பேரவை சார்பில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு பொதுச்செயலாளர் ராஜ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தலைவர் ஜெ.டி.ஆர்.சுரேஷ், துணை ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், இளைஞர் அணி செயலாளர் ஜெயபாலன், புறநகர் செயலாளர் சுப்பிரமணியன், துணை செயலாளர் ராஜசேகர், கருமண்டபம் பகுதி செயலாளர் மாரி, மிளகுபாறை பகுதி செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து தேவர்நல அறக்கட்டளை சார்பில் திரளான பெண்கள் முளைப்பாரியை தலையில் வைத்து தூக்கி கொண்டு ஊர்வலமாக முத்துராமலிங்கதேவர் சிலைக்கு வந்தனர். அங்கு தேவர் சிலையை 3 முறை வலம் வந்தனர். அதன் பின்னர் தேவர்சிலை காலடியில் முளைப்பாரியை வைத்து அனைவரும் வழிபட்டனர். மேலும் தேவர் சிலைக்கு பல்வேறு அமைப்பினர், இளைஞர்கள் என ஏராளமானோர் மேளதாளம் முழங்க வந்து மாலை அணிவித்தனர்.

Next Story