நவிமும்பையில் சுரங்கம் அமைத்து வங்கியில் ரூ.3 கோடி நகை, பணம் கொள்ளையடித்த 2 பேர் கைது


நவிமும்பையில் சுரங்கம் அமைத்து வங்கியில் ரூ.3 கோடி நகை, பணம் கொள்ளையடித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 31 Oct 2018 5:10 AM IST (Updated: 31 Oct 2018 5:10 AM IST)
t-max-icont-min-icon

நவிமும்பை சான்பாடா ஜூயி நகரில் உள்ள பரோடா வங்கி கிளையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30 லாக்கர்களை உடைத்து ரூ.3 கோடி மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் அள்ளிச் சென்றனர்.

மும்பை,

வங்கி அருகே உள்ள கடையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த கொள்ளையர்கள், அங்கிருந்து வங்கியின் லாக்கர் அறை வரை சுமார் 50 அடி நீளத்திற்கு பூமிக்கடியில் சுரங்கம் தோண்டி இந்த துணிகர கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பலரை கைது செய்து இருந்தனர். இந்த கொள்ளையில் தொடர்புடைய சஞ்சய் பாலு காம்டி (வயது30), வினோத் குமார் சிங்வி (39) ஆகிய 2 பேர் தலைமறைவாக இருந்தனர். போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக 2 பேரை பால்கர் போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது, அவர்கள் தான் நவிமும்பை வங்கி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வருபவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரும் விசாரணைக்காக நவிமும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். தலைமறைவாக இருந்த இருவரும் 1 வருடத்திற்கு பிறகு சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story