வால்பாறை சமூக ஆர்வலர் கொலை வழக்கில் தொழிலதிபர் சிக்கியது எப்படி? - பரபரப்பு தகவல்கள்


வால்பாறை சமூக ஆர்வலர் கொலை வழக்கில் தொழிலதிபர் சிக்கியது எப்படி? - பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 31 Oct 2018 3:15 AM IST (Updated: 31 Oct 2018 5:21 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை சமூக ஆர்வலர் கொலை வழக்கில் தொழிலதிபர் சிக்கியது எப்படி? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொள்ளாச்சி,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் கடந்த மார்ச் மாதம் வால்பாறையை சேர்ந்த சமூக ஆர்வலர் வனராஜ் என்பவர் உடலில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய தளி போலீசார் வால்பாறை பகுதியில் பாத்திர கடை நடத்தி வரும் முருகன் (வயது 41), அன்பு செல்வன் (23), குலோத்குமார் (25) ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் வால்பாறை நகராட்சியில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக அன்பு செல்வனிடம் இருந்து வனராஜ் ரூ.10 ஆயிரம் வாங்கினார். ஆனால் வேலை வாங்கி கொடுக்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்ததால் 3 பேரும் சேர்ந்து ஆழியாறு வனப்பகுதியில் வைத்து கொலை செய்து, உடலை காண்டூர் கால்வாயில் வீசியதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

இதற்கிடையில் கொலை நடந்த இடம் ஆழியாறு வனப்பகுதி என்பதால், வழக்கு தளியில் இருந்து ஆழியாறு போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த ஜூலை மாதம் வழக்கு மாற்றப்பட்ட நிலையில், வழக்கு விவரங்களை படித்து பார்த்த ஆழியாறு போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதனால் இன்ஸ்பெக்டர் அம்மாதுரை தலைமையிலான தனிப்படை போலீசார் துரிதமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் தொழிலதிபர் வடிவேல், டிரைவர் ஞானசங்கர் ஆகியோர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொழிலதிபர் வடிவேல் சிக்கியது எப்படி? என்பது குறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:-

ரூ.10 ஆயிரம் பணத்திற்காக வால்பாறையில் இருந்து காரில் அழைத்து வந்து, ஆழியாறில் வைத்து கொலை செய்ய வாய்ப்பில்லை. எனவே வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினோம். இந்த வழக்கில் தளி போலீசாரால் விசாரிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட டிரைவர் ஞானசங்கரை விசாரிக்க அவரது சொந்த ஊரான கோட்டூருக்கு சென்றோம். ஆனால் ஞானசங்கர் இல்லை. இதனால் எங்களுக்கு சந்தேகம் மேலும் வலுத்தது. இதையடுத்து அவர் யார், யாரிடம் செல்போனில் பேசி வருகிறார்? என்று கண்காணித்து வந்தோம். அப்போது ஞானசங்கர், தொழிலதிபர் வடிவேல், ஏற்கனவே கைது செய்யப்பட்ட முருகன் ஆகியோரிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது. சம்பவம் நடந்தது முதல் முருகன் வெளியே வந்த பிறகும் பேசிய எண்ணை கண்காணித்த போது, அந்த எண் ஞானசங்கருடையது என்பது தெரிந்தது.

அதன் அடிப்படையில் ஞானசங்கரை பிடித்து விசாரித்த போது, வடிவேலின் தொழிலுக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்ததாகவும், போலீசார் கேட்டால் அவர்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களுடன் சண்டை போட்டு கொண்டு ஊரை விட்டு சென்றதாக சொல்ல வேண்டும் என்று வடிவேல் கூறியதாக ஞானசங்கர் வாக்குமூலம் அளித்தார். மேலும் விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டிய தொழிலதிபர்கள் மீது சமூக ஆர்வலர் வனராஜ் நகராட்சி, கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்து உள்ளார். எனவே இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தப்பட்டது. அதன்பேரில் வால்பாறையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை அழைத்து விசாரணை நடத்தினோம். அவரது செல்போன் எண்ணையும் கண்காணித்தோம். ஆனால் அவருக்கு இந்த வழக்கில் தொடர்பு இல்லை என்று தெரியவந்ததால் அவரை வழக்கில் சேர்க்கவில்லை. மேலும் வனராஜை கொலை செய்ய ரூ.2 லட்சம் வரை பணம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை தெரிவிக்க மறுத்து விட்டனர். இதுவரை இந்த வழக்கில் தொழிலதிபர் வடிவேல் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் வேறு யாராவது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வர்கள் உள்ளனரா? என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story