கோவையில் 2-வது நாளாக சாலை மறியல்: சத்துணவு ஊழியர்கள் 600 பேர் கைது - போலீசாருடன் வாக்குவாதம்
கோவையில் 2-வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் 600 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
வரையறுக்கப்பட்ட ஊதியம், குடும்ப ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கடந்த 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 3 நாட்கள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமையல் செய்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.இதையொட்டி நேற்று முன் தினம் சத்துணவு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். நேற்று 2-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையின் இருபுறமும் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
இதற்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இன்னாசிமுத்து தலைமை தாங்கினார். முன்னாள் மாநில தலைவர் பழனிசாமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் குமார், சத்துணவு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பழனிசாமி, கங்காதேவி, சாரதாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியலில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால் அந்த சாலையில் வந்த வாகனங்களை போலீசார் மாற்றுவழியில் திருப்பி விட்டனர். மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இருபுறமும் அமர்ந்து மறியல் செய்யாமல் ஒரு புறம் மட்டும் அமர்ந்து மறியலில் ஈடுபடுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். அதற்கு ஊழியர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் பெண் ஊழியர்கள் தங்கள் கைகளை கோர்த்துக்கொண்டு சாலையில் படுத்தனர். ஆனாலும் போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பெண் போலீசாரை அழைத்து வந்து பெண் சத்துணவு ஊழியர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் 600 சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story