முதல்–அமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் கவர்னர் கிரண்பெடிக்கு ஆதரவாக அமைச்சர்கள் உள்ளனர் - அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


முதல்–அமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் கவர்னர் கிரண்பெடிக்கு ஆதரவாக அமைச்சர்கள் உள்ளனர் - அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 31 Oct 2018 6:15 AM IST (Updated: 31 Oct 2018 6:06 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் கிரண்பெடிக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் அமைச்சர்கள் கவர்னருக்கு ஆதரவாக உள்ளனர் என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவை அரசின் தவறான கொள்கை முடிவினால் மாநிலம் முழுவதும் பல்வேறு வி‌ஷயங்களில் கலாசார சீரழிவு தொடர்ந்து வருகிறது. நகரப்பகுதிகளில் 30–க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் ஆபாச நடனத்துடன் விபசாரமும் நடக்கிறது. எனது தொகுதியில் 5 ஓட்டல்களில் இதுபோல் நடக்கிறது. இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

மசாஜ் கிளப்புகளிலும் விபசாரம் நடக்கிறது. இதற்கான அனுமதியை ரத்துசெய்ய வேண்டிய காவல்துறை சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கருத்து கேட்கிறது. நமது மாநிலத்தில் கவர்னர், போலீஸ் டி.ஜி.பி, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் சூப்பிரண்டு போன்ற உயர் பதவிகளில் பெண்கள் உள்ளனர். அப்படியிருக்கும் நிலையிலும் முகம் சுழிக்கும் நிலையில் தவறுகள் நடத்தப்படுகிறது.

தற்போது லாட்டரி விற்பனையை கொண்டுவர அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. அரசு கலால்துறையில் கவனம் செலுத்தினாலே ஆண்டுக்கு ரூ.600 கோடி கூடுதல் வருமானம் வரும். ஏற்கனவே மதுபானங்களை கொள்முதல் செய்ய தமிழகத்தைப்போல் தனியாக கார்ப்பரேசன் தொடங்க வலியுறுத்தினோம். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மதுபான லைசென்சு வைத்திருந்தவர்களிடையேதான் இப்போதும் உள்ளது.

மக்களை பாதிக்கும் லாட்டரி விற்பனையை அனுமதிப்பதை கண்டிக்கிறோம். மக்கள் நலன் சார்ந்த வி‌ஷயங்களில் அரசுக்கு தடையாக இருக்கும் கவர்னர் கிரண்பெடி லாட்டரி விற்பனைக்கு ஒத்துழைக்கிறார். அதேபோல் சூதாட்ட கிளப் கொண்டுவரவும் அனுமதிக்கிறார். இது வெட்கக்கேடான செயல்.

தற்போதும் போலியாக லாட்டரி விற்பனை நடக்கிறது. இதை ஆட்சியாளர்களுடன் இருப்பவர்களே செய்கிறார்கள். இந்த தீபாவளி பண்டிகைக்கு தீபாவளி பஜார் இல்லை. இலவச துணி இல்லை. பட்ஜெட்டில் இலவச அரிசிக்கு நிதி ஒதுக்கப்பட்டும் இலவச அரிசி வழங்கப்படவில்லை. கவர்னரும், புதுவை அரசும் கூட்டு சேர்ந்த மக்களுக்கு கிடைக்கவேண்டியதை தடுக்கிறார்கள்.

கவர்னர் கிரண்பெடி இந்த அமைச்சரவையை இரண்டாக உடைத்துவிட்டார். முதல்–அமைச்சர் நாராயணசாமி கவர்னருக்கு எதிராக பேசிவரும் நிலையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் கவர்னருக்கு ஆதரவாக உள்ளனர். அவரது செயல்பாட்டையும் பாராட்டுகிறார்கள். முதல்–அமைச்சருக்கு ஆதரவாக அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் மட்டுமே உள்ளார். அவரது அணி பலமாக உள்ளது. அமைச்சர் ஷாஜகான் எங்கு உள்ளார்? என்றே தெரியவில்லை. முதல்–அமைச்சரின் எண்ணத்திற்கு எதிராகவே அமைச்சர்கள் உள்ளனர்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story