உவரியில் படகு இறங்குதளம் அமைக்க வேண்டும் சட்டமன்ற உறுதிமொழி குழுவிடம் மீனவர்கள் வலியுறுத்தல்


உவரியில் படகு இறங்குதளம் அமைக்க வேண்டும் சட்டமன்ற உறுதிமொழி குழுவிடம் மீனவர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 Oct 2018 1:40 PM IST (Updated: 31 Oct 2018 1:40 PM IST)
t-max-icont-min-icon

உவரியில் படகு இறங்குதளம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுதிமொழி குழுவிடம் மீனவர்கள் வலியுறுத்தினர்.

நெல்லை, 

உவரியில் படகு இறங்குதளம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுதிமொழி குழுவிடம் மீனவர்கள் வலியுறுத்தினர்.

கப்பல் மாதா ஆலயம்

தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழுவின் தலைவர் ஐ.எஸ்.இன்பத்துரை எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர், நேற்று நெல்லை மாவட்டத்தில் ஆய்வு நடத்தினர். திசையன்விளை அருகே உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில், விஜயாபதி விசுவாமித்திரர் கோவில், உவரி புனித அந்தோணியார் ஆலயம், கப்பல் மாதா ஆலயம், ஆற்றங்கரைபள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் உள்ளன.

இங்கு இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தினர் மற்றும் சுற்றுலா பயணிகள் தினமும் திரளாக வந்து செல்கின்றனர். இந்த வழிபாட்டு தலங்களில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. உவரி கப்பல் மாதா ஆலயத்தில் ரூ.36½ லட்சம் செலவில் கழிப்பறை கட்டிடம், ஓய்வுக்கூடம் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள், அங்கு கடலில் ரூ.66 கோடியே 70 லட்சம் செலவில் நிறைவேற்றப்பட்ட தூண்டில் வளைவையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் புனித அந்தோணியார் ஆலயத்தையும் பார்வையிட்டனர்.

படகு இறங்குதளம்

அப்போது புனித அந்தோணியார் ஆலயம் அருகில் கடலின் கரையில் பாறைகள் இருப்பதால், படகுகள் சேதம் அடைவதாகவும், எனவே அங்கு படகு இறங்குதளம் அமைத்து தர வேண்டும் என்றும், கப்பல் மாதா ஆலயத்துக்கு செல்லும் அணுகு சாலை பழுதடைந்த நிலையில் உள்ளதால், அதனை சீரமைக்க வேண்டும் என்றும் மீனவர்கள், சட்டமன்ற உறுதிமொழி குழுவினரிடம் வலியுறுத்தினர். இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதாக, உறுதிமொழி குழுவினர் தெரிவித்தனர். பின்னர் அவர்கள், விஜயாபதி விசுவாமித்திரர் கோவிலில் ரூ.26 லட்சம் செலவில் நிறைவேற்றப்படும் சுற்றுலா மேம்பாட்டு திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அணுமின் நிலையத்தில்...

பின்னர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், ‘கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்கு தேவையான நிலங்களை வழங்கியவர்களின் குடும்பத்தினருக்கு, அணுமின் நிலையத்தில் வேலை வழங்க வேண்டும். அவர்களுக்கு கல்வித்தகுதி, வயது தளர்வு செய்து, வேலை வழங்க முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். இதனை பரிசீலித்து நிறைவேற்றுவதாக அணுமின் நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்‘ என்றனர். பின்னர் திசையன்விளை மனோ கல்லூரியில் ரூ.3 கோடியே 10 லட்சம் செலவில் கட்டப்படும் 3 மாடி புதிய கட்டிடத்தை ஆய்வு செய்தனர். அப்போது கல்லூரியில் விளையாட்டு மைதானம், காம்பவுண்டு சுவர் அமைக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள், திசையன்விளை அருகே தோட்டவிளையில் நம்பியாற்றின் குறுக்கே ரூ.4 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து பணகுடியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் வள்ளியூர் பழைய பஸ் நிறுத்தம் அருகில் அமைக்கப்படும் பூங்கா ஆகியவற்றையும் சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து இன்று (புதன் கிழமை) நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் உறுதிமொழி குழுவினரின் ஆய்வு கூட்டம் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story