தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி


தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 1 Nov 2018 4:30 AM IST (Updated: 31 Oct 2018 11:13 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

மொரப்பூர், 
காவிரி உபரிநீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்பக்கோரி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் பா.ம.க. உழவர் பேரியக்கம் சார்பில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான பிரசார கூட்டம் கம்பைநல்லூர் பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்துக்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். உழவர் பேரியக்க மாநில தலைவர் வேலுசாமி, மாவட்ட செயலாளர் இமயவர்மன், முன்னாள் எம்.பி. பாரிமோகன், மாவட்ட தலைவர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் மதியழகன் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் இருந்து காவிரி நீர் தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்துக்கு தான் முதல் முதலாக வருகிறது. தர்மபுரி மாவட்ட மக்கள் இந்த தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே காவிரி உபரிநீரை தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ஏரி, குளம், குட்டைகளில் நிரப்ப அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் இளைஞர்கள் விவசாய வேலையில்லாமல் அண்டை மாநிலத்துக்கு சென்று கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். உபரிநீரை ஏரிகளுக்கு கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்ற ரூ.400 கோடி தேவைப்படுகிறது.

ஒரு மாவட்ட விவசாயிகள் பயன்பெறக்கூடிய இந்த திட்டத்தை செயல்படுத்தக்கோரி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று அதை முதல்-அமைச்சரிடம் நேரில் சென்று கோரிக்கை மனுவாக கொடுக்க இருக்கிறோம்.

அரசு அதன்பின்னரும் இந்த திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் பா.ம.க. சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும். அண்டை மாநிலமான ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளும் முதல்-அமைச்சர்கள் நீர்பாசன திட்டத்திற்காக பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து செலவிட்டு வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் காமராஜருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் நீர்பாசன திட்டத்திற்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் பதவி ஏற்ற 30 நாளில் ஒகேனக்கல் உபரிநீரை கிராமங்களில் உள்ள ஏரி, குளங்களுக்கு விடும் திட்டத்திற்காக ரூ.400 கோடி ஒதுக்கப்படும். 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் திட்டத்தில் இதுவரை 7¾ லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளோம். 8 வழிச்சாலை திட்டம் மக்களுக்கு பயன் இல்லாத திட்டம். எனவே ஏற்கனவே உள்ள வாணியம்பாடி-சேலம் சாலையை 6 வழிச்சாலையாக மாற்றி இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சின்னசாமி, ஒன்றிய தலைவர் முருகன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வன்னியபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் சபரி, பசவராஜ், பெரியசாமி, சேட்டு, சண்முகசுந்தரம், சரவணன், வீரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஏற்கனவே 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருமா என்று கேட்கிறீர்கள். 2 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாத தமிழக அரசு கண்டிப்பாக இடைத்தேர்தலையும் நடத்தாது. எனவே இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை.

மொரப்பூர்-தர்மபுரி ரெயில்பாதை திட்டம் தொடர்பாக கடந்த வாரம் மத்திய ரெயில்வே துறை மந்திரியை சந்தித்து கோரிக்கை வைத்தேன். அப்போது அந்த திட்டத்தை செயல்படுத்த அடிக்கல் நாட்டு விழாவுக்கான தேதியை விரைவில் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடியில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

Next Story