சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: 2 தொழிலாளிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை தர்மபுரி விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: 2 தொழிலாளிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை தர்மபுரி விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 1 Nov 2018 4:15 AM IST (Updated: 31 Oct 2018 11:19 PM IST)
t-max-icont-min-icon

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், 2 தொழிலாளிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பூதிநத்தம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி கணேசன். அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமியை பின்தொடர்ந்து சென்ற கணேசன் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதேபோல் கடத்தூர் அருகே உள்ள நொச்சிக்குட்டை கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு அந்த பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் மாடு மேய்க்க சென்ற 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த 2 வழக்குகளின் விசாரணை தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் உமாமகேஸ்வரி ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்குகளில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. கணேசன், முனுசாமி ஆகிய 2 பேருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிபதி (கூடுதல் பொறுப்பு) ஜீவானந்தம் தீர்ப்பளித்தார்.

பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட பூதிநத்தம் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு கணேசன் ரூ.1 லட்சமும், நொச்சிக்குட்டை பகுதியை சேர்ந்த சிறுமிக்கு முனுசாமி ரூ.1 லட்சமும் இழப்பீடு தொகையாக ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story