‘பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை விற்பனை செய்யுங்கள்’ வியாபாரிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை விற்பனை செய்யுங்கள் என்று பட்டாசு வியாபாரிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் காவல்துறை சார்பில் பட்டாசு வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
பட்டாசு கடை என்பது அபாயகரமான இடம். மிகவும் பாதுகாப்பாக பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும். சிறு வெடிவிபத்து நடந்தால்கூட அந்த கட்டிட உரிமையாளர், உரிமம் வாங்கியவர்கள்தான் முழு பொறுப்பு. ஏனெனில் சட்டத்தில் அப்படித்தான் உள்ளது. பெரும்பாலும் பட்டாசு கடைகளில் மின்கசிவு காரணமாகத்தான் விபத்துகள் நடக்கிறது. அதுபோன்று ஏற்படாமல் இருக்க வயர்களில் ஏதேனும் பழுது இருக்கிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.
மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்யும்போது விபத்து ஏற்படாமல் இருக்க முன்எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் செயல்பட வேண்டும். கடைகளுக்கு பட்டாசு வாங்க வரும் சிறுவர்கள் செய்வதறியாமல் விளையாட்டாக கடைக்கு அருகிலேயே கலர் தீப்பெட்டியை கொளுத்தும்பட்சத்தில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதுபோல் போதையில் யாரேனும் அணையாத சிகரெட் துண்டை கடையின் அருகில் வீசிவிட்டு செல்லும்பட்சத்திலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றையெல்லாம் கண்காணிப்பதற்கு தனியாக ஒருவரை பட்டாசு கடை முன்பு நிறுத்த வேண்டும்.
எந்தவொரு அசம்பாவிதமும், உயிர் சேதமும் ஏற்படக்கூடாது. அவ்வாறு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட கடை வியாபாரிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கும் சூழல் ஏற்படும். ஆகவே மிக கவனமாக பட்டாசு விற்பனை செய்யுங்கள். தீபாவளியையொட்டி 2, 3 நாட்கள்தான் விற்பனை நடக்கும். அந்த சமயங்களில் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகளை குவித்து வைத்து விற்காதீர்கள். உங்களுடைய உழைப்பு வீணாகி விடக் கூடாது.
பட்டாசு வியாபாரிகள் அனைவரும் உரிமம் பெற்றுத்தான் பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும். உரிமம் இன்றி விற்கக்கூடாது. சட்டதிட்டங்களுக்கும், நியாய தர்மத்திற்கு உட்பட்டும், அதே நேரத்தில் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை விற்பனை செய்யுங்கள். போலீசார், மாமூல் கேட்டோ, பட்டாசு கேட்டோ கடைக்கு வந்தால் கொடுக்காதீர்கள். உடனே என்னிடம் தகவல் தெரிவியுங்கள். ஏனெனில் போலீசாரிடம் பணம் கொடுத்துவிட்டால் பாதுகாப்பற்ற முறையில் விற்பனை செய்ய தோன்றும். அதற்கு யாரும் இடமளிக்க கூடாது. எந்தவித சிறுவிபத்தும் இல்லாமல் விபத்தில்லா தீபாவளியை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெய்சங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், ராஜன், அப்பாண்டைராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மருது, வசந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story