3-வது நாளாக போராட்டம்: சத்துணவு ஊழியர்கள் ஒப்பாரி வைத்து அழுதனர் 441 பேர் கைது


3-வது நாளாக போராட்டம்: சத்துணவு ஊழியர்கள் ஒப்பாரி வைத்து அழுதனர் 441 பேர் கைது
x
தினத்தந்தி 1 Nov 2018 4:00 AM IST (Updated: 1 Nov 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் 3-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஒப்பாரி வைத்து அழுதனர்.

பெரம்பலூர், 
காலமுறை ஊதியம், சட்ட ரீதியான ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக் கொடையாக ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். ஒரு மாணவருக்கு உணவு தயாரிக்கும் தொகையாக ரூ.5 தர வேண்டும். காலிப் பணியிடங் களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கடந்த 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை மாவட்டங்களில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.

அதன்படி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 3 நாட்களாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாததால் கடந்த 29-ந்தேதி முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

அதன்படி பெரம்பலூர் மாவட்ட சத்துணவு ஊழியர்கள் பாலக்கரை ரவுண்டானா அருகே கடந்த 2 நாட்களாக சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். இந்நிலையில் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் நேற்றும் 3-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் பாலக்கரை ரவுண்டானா அருகே சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

மறியலை கைவிடுமாறும், இல்லையென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் எச்சரித்தனர். ஆனாலும், சத்துணவு ஊழியர்கள் மறியலை கைவிடாமல் தொடர்ந்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 441 பேரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைது செய்யப்பட்ட சத்துணவு ஊழியர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் சத்துணவு ஊழியர்கள் சிலர் திடீரென்று ஒப்பாரி வைத்து அழுதனர். சத்துணவு ஊழியர்கள் தினமும் வித்தியாசமான முறையில் போராடி வருகின்றனர். தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது மதிய உணவுக்கு போராட்ட களத்திலேயே தக்காளி, எலுமிச்சை சாதங்களை தயார் செய்து சாப்பிட்டனர். மேலும் 3-வது நாளாக மறியல் போராட்டத்திற்கு பெண்கள் பலர் கருப்பு சேலை அணிந்து வந்து பங்கேற்றனர்.

Next Story