ஆலங்குடி அருகே பயங்கரம் மருந்துகடை பெண் ஊழியர் கற்பழித்து கொலை உடலை சாக்குமூட்டையில் கட்டி ஆற்றில் வீசிய காதலன் கைது


ஆலங்குடி அருகே பயங்கரம் மருந்துகடை பெண் ஊழியர் கற்பழித்து கொலை உடலை சாக்குமூட்டையில் கட்டி ஆற்றில் வீசிய காதலன் கைது
x
தினத்தந்தி 1 Nov 2018 5:00 AM IST (Updated: 1 Nov 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடி அருகே மருந்துகடை பெண் ஊழியர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஆற்றில் வீசிய காதலனை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் சித்திரைவேல். இவரது மகள் கஸ்தூரி (வயது 19). இவர் ஆலங்குடியில் உள்ள மருந்துகடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 28-ந்தேதி வேலைக்கு சென்ற கஸ்தூரி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து கஸ்தூரியின் பெற்றோர் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கஸ்தூரி எங்கு சென்றார் என்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம், அதிரான்விடுதியை சேர்ந்த கருப்பையா மகன் ஆட்டோ டிரைவர் நாகராஜன்(27) என்பவருக்கும், கஸ்தூரிக்கும் காதல் இருந்து வந்ததும், சம்பவத்தன்று 2 பேரும் ஆலங்குடியில் ஒன்றாக சுற்றி திரிந்ததும் தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் நாகராஜனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நாகராஜன் சென்னையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆலங்குடி போலீசார் சென்னைக்கு சென்று

நாகராஜனை கைது செய்தனர். பின்னர் அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்

அப்போது நாகராஜன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் பின்வருமாறு:-

கடந்த 28-ந்தேதி கஸ்தூரியை ஆலங்குடி-ஆதனக்கோட்டை சாலையில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றேன். அங்கு அவருடன் உடலுறவு கொண்டேன். அப்போது கஸ்தூரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, அவர் திடீரென மரணமடைந்தார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த நான், கஸ்தூரி உடலை சாக்குமூட்டையில் கட்டி தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மல்லிப்பட்டினத்தில் உள்ள ஆற்றில் வீசி விட்டு, சென்னைக்கு தப்பி சென்றேன். இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் நான் சிக்கி கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து ஆலங்குடி போலீசார் நாகராஜனை, மல்லிப்பட்டினத்தில் உள்ள ஆற்றிற்கு அழைத்து சென்றனர். அங்கு கஸ்தூரியின் உடலை வீசிய இடத்தை போலீசாரிடம் அவர் காட்டினார். இதையடுத்து போலீசார் ஆற்றின் கரையோரத்தில் ஒதுங்கி கிடந்த சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்தனர். அதில் கஸ்தூரி உடல் அழுகிய நிலையில் இருந்தது. கை, கால்கள் கட்டப்பட்டும் இருந்தன. இதையடுத்து போலீசார் கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், கஸ்தூரி கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் டாக்டர்களிடம் இருந்து

பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகு தான் நாகராஜன் சொல்வது உண்மையா? என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story