திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் முற்றுகை


திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 1 Nov 2018 4:00 AM IST (Updated: 1 Nov 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு உள்ள பெண் ஊழியர்கள், பணியை புறக்கணித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

திருவேற்காடு நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள வார்டுகளில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகிறதா? என்பதை கண்டறிந்து, அவற்றை அழிப்பதற்காக ஒப்பந்த முறையில் 75 பெண் ஊழியர்கள் தினந்தோறும் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு உள்ள பெண் ஊழியர்களை நகராட்சி நிர்வாகம், துப்புரவு பணியில் ஈடுபடுத்துவதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து நேற்று காலை டெங்கு கொசு ஒழிப்பு பெண் ஊழியர்கள், பணிகளை புறக்கணித்து திருவேற்காடு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் ஊழியர்களுடன் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவர்களுடன், பெண் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருவேற்காடு போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஊழியர்களை சமரசம் செய்து கலைந்து போக செய்தனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஊழியர்கள் கூறும்போது, ‘‘திருவேற்காடு நகராட்சியில் புதிதாக கமி‌ஷனர் பொறுப்பு ஏற்றதையடுத்து ஒப்பந்தம் மாற்றப்பட்டதால் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு உள்ள பெண் ஒப்பந்த ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் நோக்கில், திட்டமிட்டு அவர்களை துப்புரவு பணியில் ஈடுபடுத்துகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் எங்களுக்கு எந்த பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது என தெரியும். ஆனால் புதிதாக வருபவர்களுக்கு இடம் தெரியாது. எனவே எங்களுக்கே கொசு ஒழிப்பு பணியை வழங்கவேண்டும். அதுவரை நாங்கள் பணிக்கு வராமல் புறக்கணிப்போம்’’ என்றனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:–

திருவேற்காடு நகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் நகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் ஒப்பந்த ஊழியர்கள், இந்த பணிகளை சரிவர செய்து இல்லை.

கொசு உற்பத்தியாவதை கணக்கெடுப்பதோடு மட்டுமன்றி, கொசு உற்பத்திக்கான காரணிகள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்துவதும் அவர்களது வேலையாகும். இந்த பணிக்கு ஆன்–லைனில் திறந்தவெளி டெண்டர்விட்டுதான் ஆட்கள் தேர்வு செய்கிறோம். பணியை சரிவர செய்யாதவர்களை கண்டித்தால் மற்ற ஊழியர்களை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பணியை சரியாக செய்பவர்களுக்கு நகராட்சி சார்பில் அனைத்து உபகரணங்களும் கொடுக்கப்படுகிறது.

பணியை சரியாக செய்யாமல் ஏமாற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து பணியை புறக்கணித்தால் புதிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டு டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தொய்வில்லாமல் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story