ஊட்டி தங்கும் விடுதியில்: வாலிபர்களை கொன்ற 2 பேருக்கு இரட்டை ஆயுள் - மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
ஊட்டியில் வாலிபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஊட்டி,
ஊட்டி கூட்ஷெட் பகுதியில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இங்கு ஊட்டியை சேர்ந்த தஸ்தகீர் (வயது 24), ஹையாஸ் (25) ஆகியோர் பணி புரிந்தனர். இந்த நிலையில் கடந்த 6.9.2011 அன்று இவர்கள் இருவரும் தங்கும் விடுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். இதுகுறித்து ஊட்டி நகர மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் ஒரு காரில் வந்த மர்ம நபர்கள் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் சோதனைச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
போலீஸ் விசாரணையில் ஈரோட்டை சேர்ந்த காசி விஸ்வாதன், சிவசக்தி மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் என மொத்தம் 4 பேர் சேர்ந்து அந்த வாலிபர்களை கொன்றது தெரிய வந்தது. மேலும் காசி விஸ்வநாதன், ஈரோட்டை சேர்ந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஊட்டியை சேர்ந்த தஸ்தகீருடன் திருமணம் நிச்சயம் ஆனது. இதை அறிந்த அவர் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய இடையூறாக இருந்த தஸ்தகீரை கொலை செய்ய முடிவு செய்து ஊட்டிக்கு தனது நண்பர்களுடன் வந்துள்ளார்.
பின்னர் தஸ்தகீர் பணிபுரிந்த விடுதியில் தங்கிய அவர்கள் இரவில் தஸ்தகீரை கொலை செய்தனர். இதனை தஸ்தகீருடன் பணிபுரிந்த ஹையாஸ் பார்த்து விட்டதால் அவரையும் கொலை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், வாலிபர்களை கொலை செய்த காசி விஸ்வநாதன் மற்றும் சிவசக்தி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 2 சிறுவர்களின் மீதான வழக்கு சிறுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மாலினி பிரபாகர் ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story