ஆத்தூரில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.4.12 லட்சம் நிவாரணம் கலெக்டர் தகவல்
ஆத்தூரில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சத்து 12 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
சேலம்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த சாமிவேல்-சின்னபொண்ணு தம்பதியின் மகள் ராஜலட்சுமி (வயது 14). இவள், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த மாதம் 22-ந்தேதி வீட்டில் இருந்த சிறுமி ராஜலட்சுமியை அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (26) என்பவர் வீட்டுக்குள் புகுந்து தலையை துண்டித்து மிகவும் கொடூரமாக கொலை செய்தார்.
இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆத்தூரில் சிறுமியை மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்தவர் மீது ஏற்கனவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறுமியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்துக்கு ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500 நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தனது கண்முன்னே நடந்த கொடூர சம்பவத்தால் ராஜலட்சுமியின் தாய் சின்னபொண்ணு கடும் மனஉளைச்சலில் இருந்து வருகிறார். இதனால் அவருக்கு உரிய கவுன்சிலிங் வழங்கி அந்த துக்கத்தில் இருந்து மீள்வதற்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார்.
இதனிடையே, மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மாலை சிறுமி ராஜலட்சுமியின் தாய் சின்னபொண்ணு மற்றும் அவரது குடும்பத்தினர் வந்தனர். பின்னர், அவர்கள் கலெக்டர் ரோகிணியை சந்தித்தனர். அப்போது, அவர்களிடம் ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500-க்கான காசோலையை கலெக்டர் ரோகிணி வழங்கினார். அந்தசமயத்தில், கண்கலங்கி அழுத சின்னபொண்ணுவை கலெக்டர் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார்.
Related Tags :
Next Story