சேலத்தில், நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்து சேதம்
சேலத்தில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தன.
சேலம்,
சேலம் சின்னபுதூர் முருகனடி தெருவை சேர்ந்தவர் சரோஜா. இவருக்கு சொந்தமான 4 வீடுகள் அந்த பகுதியில் உள்ளன. அதில் 4 குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். அங்கு வாகனம் நிறுத்துவதற்காக தனியாக இடம் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கு குடியிருப்பவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் 4 மோட்டார் சைக்கிளும் திடீரென்று தீப்பிடித்து எரியத்தொடங்கின. இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கூச்சலிட்டனர். இந்த சத்தத்தை கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து சேலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 4 மோட்டார் சைக்கிளும் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
பின்னர் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் 4 பேரிடம் தனித்தனியாக விசாரித்தனர். மேலும் அங்கு குடியிருப்பவர்களிடம் விசாரித்தனர். முன்விரோதம் காரணமாக யாராவது தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story