10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் 3-வது நாளாக சாலை மறியல்


10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் 3-வது நாளாக சாலை மறியல்
x
தினத்தந்தி 1 Nov 2018 4:15 AM IST (Updated: 1 Nov 2018 3:30 AM IST)
t-max-icont-min-icon

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில்சத்துணவு ஊழியர்கள்3-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக நேற்று தஞ்சை ரெயிலடி அருகே காந்திஜி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் உமா தலைமை தாங்கினார்.

போராட்டத்தில், சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர் களுக்கு சட்டப்பூர்வமான குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பெண் சத்துணவு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பை 9 மாதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் கலந்து கொண்ட சத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டையும், கருப்பு சேலையும் அணிந்திருந்தனர். பலர் ஒன்று சேர்ந்து ஒப்பாரி வைத்தனர். அப்போது தக்காளி வாங்குவதற்கு கூட காசு கொடுக்காமல் சமையல் செய்ய சொன்னால் நாங்கள் என்ன செய்வோம் என்று கூறி அம்மாவும், அப்பாவும் எங்களை கைவிட்டு விட்டீர்கள் என்று ஒப்பாரி வைத்தனர். சிலர் சாலையில் படுத்து கொண்டனர்.

மறியல் போராட்டத்தினால் 10 நிமிடம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து மினிபஸ்கள், வேன்களில் ஏற்றி சென்றனர். மொத்தம் 250 பெண்கள் உள்பட 280 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story