பாம்பனில் புதிய பாலம் கட்ட கடலில் மண் ஆய்வு
பாம்பனில் புதிய பாலம் கட்ட கடலுக்குள் இரவிலும் மின் விளக்கு வெளிச்சத்தில் மண் ஆய்வு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் தீவுக்கு செல்ல பாம்பன் ரோடு பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ராமநாதபுரம்–ராமேசுவரம் இடையே உள்ள இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கி அதற்கான அனுமதியும் வழங்கிவிட்டது.
இந்நிலையில் பாம்பன் கடலில் நான்கு வழிச்சாலை பாலம் கட்டுவதற்காக கடந்த 2 மாதத்திற்கு மேலாக மண்டபம் கடற் கரை பூங்கா மற்றும் பாம்பன் தெற்குவாடி கடற்கரை உள்ளிட்ட பல இடங்களில் மண் ஆய்வு நடைபெற்றது.
இந்நிலையில் மண்ஆய்வு பணியை விரைந்து முடிக்க கடந்த சில நாட்களாக இரவு–பகலாக கடலில் மிதவை அமைத்து ஆழ்குழாய் எந்திரம் மூலம் மண் ஆய்வு பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது.இரவில் மின் விளக்கு வெளிச்சத்தில் மண் ஆய்வு நடைபெற்று வருவதை ரோடு பாலம் மற்றும் கடற்கரை பகுதியில் நின்றபடி சுற்றுலாபயணிகளும், மீனவர்களும் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.