தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் வெறிச்சோடிய காதர்பேட்டை வர்த்தகர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் ஆடை தயாரிப்பாளர்கள்
தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் காதர்பேட்டை வெறிச்சோடி காணப்படுகிறது. வர்த்தகர்களை எதிர்பார்த்து ஆடை தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள்.
திருப்பூர்,
பனியன் நகரம் என்றழைக்கப்படும் திருப்பூரில் ஆடை தயாரிப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதனால் திருப்பூரில் திரும்பும் திசையெங்கும் பின்னலாடை நிறுவனங்களை காண முடியும். மேலும், அது தொடர்புடைய ஜாப் ஒர்க் நிறுவனங்களும் அதிகளவில் இருந்து வருகின்றன.
திருப்பூரில் பல்வேறு இடங்களில் ஆடை விற்பனை கடைகள் இருந்தாலும், ஆடை விற்பனைக்கு பெயர் பெற்றது காதர்பேட்டை ஆகும். இங்கு ஏராளமான மொத்த மற்றும் சில்லரை ஆடை விற்பனை கடைகள் செயல்பட்டு விற்பனை நடைபெற்று கொண்டிருக்கும். தினமும் ஏராளமாக வெளிநாட்டு வர்த்தகர்கள் மற்றும் வெளிமாநில வியாபாரிகளின் நடமாட்டமாக இருந்து கொண்டிருக்கும்.
இந்நிலையில் நாடு முழுவதும் வருகிற 6-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கான ஆடைகளை தயாரித்து ஆடை தயாரிப்பாளர்கள் தயாராக இருந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் காதர்பேட்டை வர்த்தகர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வர்த்தகர்களை எதிர்பார்த்து ஆடை தயாரிப்பாளர்கள் காத்திருந்து வருகிறார்கள்.
இது குறித்து உள்நாட்டு ஆடை தயாரிப்பாளர் பிரபு கூறியதாவது:-
காதர்பேட்டையில் உள்ள கடைகளுக்கு தினமும் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளில் இருந்து வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் வருவார்கள். இங்குள்ள கடைகளில் ஆடைகளை பார்வையிட்டு தங்களுக்கு ஏற்ற ஆடைகளை வாங்கி செல்வார்கள். ஆர்டர்களும் கொடுத்து செல்வார்கள். இதனால் காதர்பேட்டை பண்டிகை காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் பரபரப்பாக இருந்து கொண்டிருக்கும்.
இந்நிலையில் வருகிற 6-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு இருந்து ஏராளமான வர்த்தகர்கள் வந்து கொண்டிருப்பார்கள். வர்த்தகமும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும். இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் காதர்பேட்டையில் உள்ள வீதிகள், மற்றும் கடைகள் வெறிச்சோடியே காணப்படுகின்றன. மத்திய அரசு ஜி.எஸ்.டி. அமல்படுத்தியதில் இருந்து பின்னலாடை வர்த்தகம் மந்தமடைந்து சென்று கொண்டிருக்கிறது.
காதர்பேட்டையிலும் வர்த்தகம் குறைந்து கொண்டே இருந்து வருகிறது. வியாபாரிகளின் வரத்தும் குறைந்தது. தீபாவளி பண்டிகைக்கு வர்த்தகர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையில், ஆடைகளை தயாரித்து விற்பனைக்காக வைத்திருந்தோம். ஆனால் வர்த்தகர்கள், வியாபாரிகள் வரவே இல்லை. இன்னும் ஒரு சில நாட்களே தீபாவளி பண்டிகைக்கு உள்ளது.
வர்த்தகர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான வர்த்தகம் 30 சதவீதம் கூட நடைபெறவில்லை. இதனால் தயாரித்து வைத்த ஆடைகள் அனைத்தும் நிறுவனங்கள், கடைகளில் தேங்கிய நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. மொத்த வியாபாரம் பெரும் சரிவை சந்தித்து விட்டது.
சில்லரை வியாபாரம் மட்டுமே நடந்து வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னை, நெல்லை, கன்னியாகுமரி, பழனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளும் வரவில்லை. இதனால் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை மந்த நிலையிலேயே இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story