ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி கோர்ட்டில் வழக்கு - கே.சி.பழனிசாமி பேட்டி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கூறினார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை,
அ.தி.மு.க.வில் உள்ள சட்டவிதிகளை மாற்றி, புதிய சட்டவிதிகளை கொண்டு வந்து இருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன்.
அதுபோன்று எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வெற்றிவேல் தொடர்ந்த வழக்கில் தங்களால் முடிவெடுக்க முடியவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது. இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திடம் வெறும் 5 ஆயிரம் பேர் மட்டுமே இருக்கிறார்கள். லட்சக்கணக்கான தொண்டர்கள் அதிருப்தியில்தான் இருக்கிறார்கள்.
எப்போதுமே கட்சிதான் ஆட்சியை நடத்தும். ஆனால் தமிழகத்தில் தற்போது ஆட்சிதான் கட்சியை நடத்துகிறது. கட்சியை பலவீனப் படுத்தும் நடவடிக்கையில்தான் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது கட்சிக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டு உள்ளது. ஆட்சியாளர்கள் மீதான வழக்குகளை காரணம் காட்டி கட்சியை பலவீனப்படுத்த முடியும்.
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்டு வந்த அ.தி.மு.க. பலமான கட்சி ஆகும். அதை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சீரழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தேசிய கட்சியோ அல்லது நடிகரோ இந்த கட்சியை தவறாக வழிநடத்த வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் கட்சி காணாமல்போய்விடும்.
பதவி பறிபோன 18 எம்.எல்.ஏ.க்கள் இன்னமும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்படவில்லை. அவர்களை கட்சிக்கு வாருங்கள் என்று அழைப்பது நகைச்சுவையாக இருக்கிறது. நான் எப்போதும் அ.தி.மு.க.வை சேர்ந்தவன்தான். அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் மட்டுமே எனக்கு தலைவர்.
சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என யார் வேண்டுமானாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டால் அவர்களை ஏற்க தயார். எனவே முதலில் கட்சிக்குள் தேர்தலை நடத்துங்கள். அதைத்தான் அனைத்து உறுப்பினர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story