குடிபோதையில் மதுவென நினைத்து விஷம் குடித்த தொழிலாளி பலி; அதிர்ச்சியில் மனைவியும் இறந்த பரிதாபம்
குடிபோதையில் மதுவென நினைத்து விஷத்தை குடித்த தொழிலாளி இறந்தார். இந்த அதிர்ச்சியில் அவருடைய மனைவியும் பரிதாபமாக இறந்தார்.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பெருமாள்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 55). விவசாயி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இவருடைய மனைவி சித்ரா (45). இவருக்கு இதயநோய் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு லோகேஷ் (14), சூரியன் (11) என 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 29–ந்தேதி வெங்கடாசலம் குடிபோதையில் வீட்டுக்கு வந்து உள்ளார். பின்னர் அவர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) மதுவென நினைத்து எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் வெங்கடாசலத்தை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
எனினும் சிகிச்சை பலனளிக்காமல் வெங்கடாசலம் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்த தகவல் அதிகாலை வெங்கடாசலத்தின் மனைவி சித்ராவுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் அவர் அதிர்ச்சியில் அங்கேயே மயங்கி கீழே விழுந்து இறந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்த வெங்கடாசலம் மற்றும் சித்ராவின் உடலை பார்த்து மகன்கள் லோகேஷ், சூரியன் மற்றும் உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.