அந்தியூர் அருகே சமையல் செய்ய மறுத்த மனைவியை மண்வெட்டியால் வெட்டிக்கொன்ற கணவர்


அந்தியூர் அருகே சமையல் செய்ய மறுத்த மனைவியை மண்வெட்டியால் வெட்டிக்கொன்ற கணவர்
x
தினத்தந்தி 1 Nov 2018 5:05 AM IST (Updated: 1 Nov 2018 5:05 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே சமையல் செய்ய மறுத்த மனைவியை மண்வெட்டியால் வெட்டிக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

அந்தியூர்,

கொல்கத்தா ஹசனாபாத் பகுதியை சேர்ந்தவர் ரோஹித் காஜா (வயது 34). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தோமினா (30). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தா பகுதியை சேர்ந்த தொழிலாளிகள் சிலர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தாசரியூர் பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு வந்தனர். இதில் அவர்களுடன் ரோஹித் காஜா மற்றும் அவருடைய மனைவி தோமினா, குழந்தைகள் 2 பேரை மட்டும் அழைத்து சென்றனர். மற்ற 2 குழந்தைகள் கல்கத்தாவில் உள்ள தோமினாவின் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டனர்.

பின்னர் தொழிலாளர்கள் அனைவரும் அந்தப்பகுதியில் குடிசை வீடு அமைத்து செங்கல் சூளையில் வேலை பார்த்தனர். இதில் ரோஹித் காஜாவும், தோமினாவும் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்ததோடு அங்கு வேலை பார்த்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் அவர்கள் 2 பேரும் மற்ற தொழிலாளர்களுடன் செங்கல் சூளையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது ரோஹித் காஜா தன்னுடைய மனைவியான தோமினாவிடம் ‘மதியம் நேரம் ஆகிவிட்டது வீட்டிற்கு சென்று சமையல் செய்யவேண்டும்’ என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதில் தோமினா சமையல் செய்ய மறுத்ததோடு, சிறிது நேரம் கழித்து செல்கிறேன் என்று கூறினார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரோஹித் காஜா அங்கே கிடந்த மண்வெட்டியால் தோமினாவின் தலையில் வெட்டினார். இதனால் அவர் படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்தார்.

இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் வேலை பார்த்த தொழிலாளிகள் தோமினாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் கொண்டு செல்லும் வழியிலேயே தோமினா பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் அங்கு சென்று தோமினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை மண்வெட்டியால் வெட்டிக்கொலை செய்த ரோஹித் காஜாவை கைது செய்தனர்.

மனைவியை மண்வெட்டியால் கணவர் வெட்டிக்கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story