கவர்னர் மாளிகையில் நன்கொடையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு; அமைச்சர் நமச்சிவாயம் புறக்கணிப்பு


கவர்னர் மாளிகையில் நன்கொடையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு; அமைச்சர் நமச்சிவாயம் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 1 Nov 2018 5:45 AM IST (Updated: 1 Nov 2018 5:45 AM IST)
t-max-icont-min-icon

புதுவை கவர்னர் மாளிகையில் கால்வாய்களை தூர்வார நிதி உதவி வழங்கிய நன்கொடையாளர்களை கவர்னர் கிரண்பெடி விருது வழங்கி கவுரவித்தார். விழாவை அமைச்சர் நமச்சிவாயம் புறக்கணித்தார்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் மாளிகையில் கால்வாய்களை தூர்வார நிதி உதவி வழங்கிய நன்கொடையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு கவர்னர் கிரண்பெடி தலைமை தாங்கி ‘நீர் வளமிக்க புதுச்சேரி‘ என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து அவர், கால்வாய்களை தூர்வார நிதி உதவி வழங்கியவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

விழாவில் கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:–

புதுச்சேரியில் நீர் வளத்திட்டத்திற்கு புத்துயிர் கொடுத்துள்ளோம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், வெள்ளப்பாதிப்பை தடுக்கவும் இது உதவும். நீர் வளத்திட்டம் தனி நபரால் செய்யமுடியாது. கூட்டு முயற்சியினால் தான் செய்ய முடியும். எனவே பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு எங்களுடன் ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த திட்டத்திற்கு நிதி உதவி அளித்தவர்களிடம் கேள்வி கேட்டால் என்னை தொடர்பு கொள்ளும்படி தெரிவியுங்கள். இந்த திட்டத்தை செயல்படுத்த ஆய்வு மேற்கொண்டதை புத்தகமாக வெளியிட்டு உள்ளேன். இதனை பிரதமருக்கு அனுப்பி வைக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவுக்கு அமைச்சர் நமச்சிவாயத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் விழாவில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிட்டு வாழ்த்து மட்டும் அனுப்பி இருந்தார்.


Next Story