பழனியில் பரபரப்பு: அரசு போக்குவரத்து கழக பணிமனையை முற்றுகையிட்ட மாணவர்கள்


பழனியில் பரபரப்பு: அரசு போக்குவரத்து கழக பணிமனையை முற்றுகையிட்ட மாணவர்கள்
x
தினத்தந்தி 1 Nov 2018 3:30 AM IST (Updated: 1 Nov 2018 5:49 AM IST)
t-max-icont-min-icon

பழனி அரசு போக்குவரத்து கழக பணிமனையை பொதுமக்கள், மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி, 

பழனி ரெயில்வே பீடர் ரோட்டில் அரசு போக்குவரத்து கழக பணிமனை செயல்பட்டு வருகிறது. நேற்று, பழனியை அடுத்த சின்னக்காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அரசு பள்ளி மாணவர்கள் பணிமனைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெய்க்காரப்பட்டி வழியாக சின்னக்காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பஸ் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். பின்னர் பணிமனை மேலாளர் ஜெகதீஸ்வரனை சந்தித்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

பழனியை அடுத்த பெரியம்மாபட்டி அருகே சின்னக்காந்திபுரம், அய்யர்தோட்டம், சண்முகம்பாறை, புளியம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 4 தொடக்கப்பள்ளிகளும், ஒரு உயர்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. அவற்றில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

கடந்த 1992-ம் ஆண்டில், பழனியில் இருந்து நெய்க்காரப்பட்டி வழியாக சின்னக்காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. ஆனால் அதே ஆண்டின் இறுதியில், பெய்த பலத்த மழையால் பச்சையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது பச்சையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

அதன் பிறகு அரசு பஸ் இயக்குவது நிறுத்தப்பட்டது. பாலம் சீரமைத்த பின்னரும் அந்த வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கடந்த சில ஆண்டுகளாக புகார் தெரிவித்து வந்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை. பஸ் இயக்கப்படாததால் தனியார் வாகனங்களில் ரூ.20 முதல் ரூ.40 வரை கட்டணம் செலுத்தி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பழனியில் இருந்து நெய்க்காரப்பட்டி வழியாக சின்னக்காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பஸ் இயக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்ற போக்குவரத்து கழக மேலாளர், ஓரிரு வாரங்களுக்குள் அந்த கிராமங்களுக்கு காலை, மாலையில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதையடுத்து மாணவர்கள், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story