பாகூர் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதலில் முறைகேடு; தனவேலு எம்.எல்.ஏ. ஆய்வில் கண்டுபிடிப்பு
பாகூர் கூட்டுறவு சங்கத்தில் தனவேலு எம்.எல்.ஏ. ஆய்வு செய்ததில், பால் கொள்முதலில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பாகூர்,
பாகூர் தாலுகா அலுவலகம் எதிரே பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு பாகூர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள் பால் உற்பத்தி செய்து, வழங்குகின்றனர். மேலும் இங்கு பொதுமக்களுக்கும் பால் வினியோகம் செய்யப்படுகிறது.
கொள்முதல் மற்றும் விற்பனையில் பாலின் அளவில் முறைகேடு நடப்பதாக பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இது தொடர்பாக தனவேலு எம்.எல்.ஏ.விடமும் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் தனவேலு எம்.எல்.ஏ., கூட்டுறவுத்துறை அதிகாரி குமாரவேலு ஆகியோர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பால் உற்பத்தியாளர்கள் ஊற்றிய பாலை மின்னணு அளவீடும் எந்திரத்தில் ஊற்றி ஆய்வு செய்தபோது, லிட்டருக்கு 100 மில்லி லிட்டர் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி பால் உற்பத்தியாளர்களிடம் தனவேலு எம்.எல்.ஏ. விளக்கம் கேட்டார். பால் கொள்முதலில் முறைகேடு செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இதுபற்றி தீவிர விசாரணை நடத்தவும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார்.