நெல்லை அருகே நின்ற லாரி மீது பஸ் மோதல்: தந்தை–மகள் உள்பட 3 பேர் பலி 32 பேர் படுகாயம்


நெல்லை அருகே நின்ற லாரி மீது பஸ் மோதல்: தந்தை–மகள் உள்பட 3 பேர் பலி 32 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 2 Nov 2018 3:30 AM IST (Updated: 1 Nov 2018 6:33 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே நின்ற லாரி மீது அரசு பஸ் மோதியதில் தந்தை–மகள் உள்பட 3 பேர் பலியானார்கள். 32 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

நெல்லை,

நெல்லை அருகே நின்ற லாரி மீது அரசு பஸ் மோதியதில் தந்தை–மகள் உள்பட 3 பேர் பலியானார்கள். 32 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

லாரி மீது மோதிய பஸ்

கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்றுமுன்தினம் இரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை குமரி மாவட்டம் சுசீந்திரத்தை சேர்ந்த டிரைவர் முரளிதரன் ஓட்டினார். கண்டக்டராக கொட்டாரத்தை சேர்ந்த குமரன் என்பவர் இருந்தார். பஸ்சில் 35–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

அந்த பஸ் நெல்லை அருகே உள்ள தாழையூத்து பண்டாரகுளம் அருகே நேற்று அதிகாலை 4 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் கிரானைட் கற்களுடன் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கண் இமைக்கு நேரத்தில் பஸ் மோதியது. இதில், பஸ்சின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

3 பேர் பலி

இந்த கோர விபத்தில் பஸ்சின் முன்பகுதியில் உள்ள சீட்டில் அமர்ந்து இருந்த குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த சுப்பையா (வயது 55), அவரது மகள் சுகன்யா (21), கோவை மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ரமேஷின் மனைவி சுஜா (35), மகன் தர்‌ஷன் (9), மகள் பிரியா (10) உள்பட 32 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் அங்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

லாரி டிரைவரிடம் விசாரணை

விபத்து குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான தர்மபுரி அருகே உள்ள சாமிநகரை சேர்ந்த சங்கர் (38), கிளீனரான செக்கசமுத்திரத்தை சேர்ந்த அருண் (21) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் அவர்கள் பாலக்கோடு பகுதியில் இருந்து கிரானைட் கற்களை லாரியில் ஏற்றிக்கொண்டு பாளையங்கோட்டைக்கு வந்ததும், குடிநீர் பிடிப்பதற்காக ரோட்டு ஓரத்தில் லாரியை நிறுத்தி வைத்து இருந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்தது தெரியாமல் கணவரை தேடிய பெண்

விபத்தில் பலியான ரமேசின் மனைவி சுஜா தனது காயத்தை பொருட்படுத்தாமல், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கணவரை தேடினார். அவர் இறந்தது தெரியாமல் அழுதபடியே அவரை தேடிக்கொண்டே இருந்தார்.

பின்னர் அங்கு இருந்த ஒருவர் செல்போனில் இறந்தவர்களின் படத்தை காட்டிக் கொண்டு இருந்தார். இதை பார்த்த பிறகு தான் சுஜாவிற்கு தனது கணவர் ரமேஷ் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது. அதன்பிறகு அவர் ஆம்புலன்சில் இருந்த தனது கணவர் ரமேஷ் உடலை பார்த்து கதறி அழுதார். அப்போது அவரும் மயங்கி விழுந்து விட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.


Next Story