2019-20-ம் ஆண்டிற்கு வளம் சார்ந்த வங்கி கடனாக ரூ.5,474 கோடி வழங்க இலக்கு கலெக்டர் தகவல்


2019-20-ம் ஆண்டிற்கு வளம் சார்ந்த வங்கி கடனாக ரூ.5,474 கோடி வழங்க இலக்கு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 Nov 2018 4:30 AM IST (Updated: 1 Nov 2018 10:16 PM IST)
t-max-icont-min-icon

2019-20-ம் ஆண்டிற்கு வளம் சார்ந்த வங்கி கடனாக ரூ.5,474 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கந்தசாமி கூறினார்.

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர வங்கியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி, நபார்டு வங்கியின் 2019-20-ம் ஆண்டிற்கான ரூ.5,474.31 கோடி வளம் சார்ந்த வங்கிக்கடன் திட்டத்தை வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

இந்த திட்டம் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னோடி கடன் வழி முறைகளையும், அரசு திட்டங்களையும், மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, உருவாக்கப்படுகின்ற உள்கட்டமைப்புகள் மற்றும் வங்கிகள், அரசு துறைகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை வங்கிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்கும் திட்டம் மாவட்டத்தின் வேளாண்மை, வேளாண்மை சார்ந்த துணை தொழில்கள் மற்றும் வேளாண்மை சாரா பிரிவுகளை வளப்படுத்த வேண்டும்.

இந்த திட்ட அறிக்கையின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கி கிளைகளின் மூலம் வளம் சார்ந்த கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ.5,474.31 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு நடப்பு 2018-19-ம் ஆண்டு இலக்கை விட 13.74 சதவீதம் அதிகமாகும்.

மத்திய அரசாங்கத்தின் 2022-ம் ஆண்டில் விவசாய வருவாயை இரட்டிப்பாக்கும் இலக்குக்கு ஏற்ப மாவட்டத்தில் நீர்நிலை பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு மற்றும் தண்ணீர் சார்ந்த பயன்பாட்டை பருவநிலை மாற்றத்திற்கேற்ப மேம்படுத்துவதற்கான வழி முறைகள் குறித்தும் வலியுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை கலெக்டர் உமாமகேஸ்வரி, இந்திய ரிசர்வ் வங்கி மாவட்ட முன்னோடி அலுவலர் பாலாஜி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ஸ்ரீராம், வேளாண்மை துறை இணை இயக்குனர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், வங்கியாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story