குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி ஆய்வுக்கு வந்த அதிகாரியை கிராமமக்கள் முற்றுகை


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி ஆய்வுக்கு வந்த அதிகாரியை கிராமமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 1 Nov 2018 11:00 PM GMT (Updated: 1 Nov 2018 5:32 PM GMT)

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி ஆய்வுக்கு வந்த அதிகாரியை கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழகவட்டாங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட குந்தபுரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. இங்கு ஒரு குடிநீர் குழாய் கூட இல்லாததால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள கீழக்கவட்டாங்குறிச்சிக்கு சென்றுதான் பெண்கள் குடிநீர் எடுத்து வருகின்றனர். இதனால், அவர்கள் தினமும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று காலை குந்தபுரம் கிராமத்திற்கு சுகாதார ஆய்வுக்காக மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பாஸ்கர் வந்தார். அப்போது அவரை காலிக்குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் அந்த அதிகாரி சிறிது நேரம் திகைத்து நின்றார். அப்போது, பெண்கள் எங்கள் கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இல்லையென்றால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். அதற்கு அந்த அதிகாரி, குந்தபுரம் கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story