குடிப்பதற்கு பணம் கேட்டு அடித்து துன்புறுத்திய மகனுக்கு போலீஸ் நிலையத்தில் இரக்கம் காட்டிய தாய்


குடிப்பதற்கு பணம் கேட்டு அடித்து துன்புறுத்திய மகனுக்கு போலீஸ் நிலையத்தில் இரக்கம் காட்டிய தாய்
x
தினத்தந்தி 2 Nov 2018 4:30 AM IST (Updated: 1 Nov 2018 11:33 PM IST)
t-max-icont-min-icon

குடிப்பதற்கு பணம் கேட்டு அடித்து துன்புறுத்திய மகனுக்கு போலீஸ் நிலையத்தில் தாயார் இரக்கம் காட்டினார்.

அரக்கோணம், 
தக்கோலம் திருமாம்பழநாதர் கோவில் தெருவை சேர்ந்த பரமசிவம் என்பவரது மனைவி பாஞ்சாலை (வயது 84). பரமசிவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதை தொடர்ந்து தனது கடைசி மகன் சக்திநாதன் (36) வீட்டில் வசித்து வந்தார். அத்துடன் அரசின் 1,000 ரூபாய் முதியோர் உதவித்தொகையும் பெற்று வருகிறார். டீக்கடையில் வேலை பார்க்கும் சக்திநாதனுக்கு குடிபழக்கம் உண்டு. இதனால் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தாய் பாஞ்சாலையிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், குடிப்பதற்கு முதியோர் உதவித்தொகையை கொடு இல்லையென்றால் மூக்குத்தியை கொடு என்று அடித்து துன்புறுத்தி உள்ளார். அடி தாங்க முடியாமல் பாஞ்சாலை நேற்று அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க வாசலில் காத்து நின்றார். அப்போது டவுன் போலீஸ் நிலையத்திற்கு ஆய்வுக்கு சென்ற துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.கே.துரைப்பாண்டியன் வாசலில் நின்று கொண்டிருந்த மூதாட்டியை கைத்தாங்கலாக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். பின்னர் அவரை உட்கார வைத்து பிஸ்கெட், டீ வாங்கி கொடுத்து பிரச்சினை குறித்து கேட்டறிந்தார்.

இதனையடுத்து பாஞ்சாலை கொடுத்துள்ள புகார் மனுவில், ‘எனது மகன் சக்திநாதன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து பணம் கேட்டு என்னை அடித்து துன்புறுத்துகிறார் என்று கூறியிருந்தார்.

டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு புகார் மனுவை பெற்றுக்கொண்டு சக்திநாதனை அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது அருகில் நின்ற பாஞ்சாலை, எனது மகனை அடித்துவிட வேண்டாம். ஜெயிலில் போடவும் வேண்டாம். அவனுக்கு தேவையான அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தால் போதும். என்னால் எனது மகன் கஷ்டப்படுவதை பார்க்க முடியாது என்று கண்ணீர் மல்க கூறினார்.

அதைத் தொடர்ந்து போலீசார் சக்திநாதனுக்கு அறிவுரை வழங்கி இனிமேல் தாயாரை அடிக்கக்கூடாது என்று எழுதி வாங்கிகொண்டு அனுப்பி வைத்தனர்.

அரக்ககுணம் படைத்த மகன், இரக்க குணம் படைத்த தாய் இவர்களை பார்த்த அங்கிருந்த போலீசார் ‘பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு’ என கூறி தாய், மகன் இருவரையும் அனுப்பி வைத்தனர்.

Next Story