விபத்தில்லா தீபாவளி கொண்டாட பட்டாசு விற்க, வெடிக்க கட்டுப்பாடுகள் - கலெக்டர் தகவல்


விபத்தில்லா தீபாவளி கொண்டாட பட்டாசு விற்க, வெடிக்க கட்டுப்பாடுகள் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 Nov 2018 3:00 AM IST (Updated: 2 Nov 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவதற்காக பட்டாசு விற்பனை செய்யவும், வெடிப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பட்டாசு விற்பனை, பாதுகாப்பாக இருக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பல்லவி பல்தேவ் பேசும்போது கூறியதாவது:-

பொதுமக்கள் பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் காற்றுமாசுவை குறைப்பதற்காக 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கடைபிடித்திட வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், புனித தலங்கள் மற்றும் குடிசைகள், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களின் அருகே பட்டாசு வெடிக்கக் கூடாது. அதிக ஒலி, ஒளி, புகை வரக் கூடிய பட்டாசுகளை வெடிக் கக் கூடாது. பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். சிறுவர், சிறுமிகளை பெரியவர் களின் துணையில்லாமல் பட்டாசு வெடிக்க அனுமதிக்கக்கூடாது.

பட்டாசு விற்பனையாளர்கள் பட்டாசுகள் விற்பதற்கு உரிமம் பெற்ற வளாகத்திலேயே விற்பனை செய்ய வேண்டும். பட்டாசு கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட எடை அளவிற்கு மட்டுமே இருப்பு வைக்க வேண்டும். ஒரு சமயத்தில் ஒரு இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் பட்டாசு பண்டல்களை இறக்குவதையோ ஏற்றுவதையோ தவிர்க்க வேண்டும். பட்டாசு பண்டல்களை இறக் கும் போதும் ஏற்றும் போதும் கவனமாக கையாள வேண்டும். அந்த பணி செய்பவர்கள் மது அருந்தவோ, புகை பிடிக்கவோ கூடாது.

பட்டாசுகளின் ஆபத்தான தன்மை விற்பனையாளர்கள் மற்றும் பணியாட்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு பட்டாசு பாக்கெட்டுகள் மற்றும் பெட்டிகளைக் கையாள்வது குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். பண்டல்களை (சரக்குகளை) வண்டியில் இருந்து இறக்கும் போதும், ஏற்றும் போதும் “உஷார், கவனம்“ போன்ற பலகையோ, பேனரோ, பதாகைகளையோ வைத்து எச்சரிக்க வேண்டும். சிகரெட், பீடி, தீப்பெட்டி போன்ற பொருட்கள் பட்டாசு கடைகளில் வைத்திருக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. ‘புகை பிடிக்க கூடாது“ மற்றும் ‘கடைக்கு அருகிலோ, எதிரிலோ பட்டாசு வெடிக்க கூடாது“ என்பன போன்ற எச்சரிக்கை பதாகைகளை கடைகளுக்கு அருகில் வைக்க வேண்டும்.

கடைகளின் முன்னால் தற்காலிக கூடாரம், தளம் அமைத்து பட்டாசுகள் விற்பனை செய்யக் கூடாது. கடையினுள் பட்டாசுகள் மற்றும் வாடிக்கையாளர்கள் மிக நெருக்கமாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடையினுள் புகை வரக்கூடிய மற்றும் மெழுகுவர்த்திகள், விளக்குகள், லாந்தர் விளக்குகள் போன்றவற்றை அனுமதிக்கக் கூடாது. கடையிலோ, கடைக்கு அருகிலோ மெழுகுவர்த்தி மற்றும் விளக்கு, மின்சார சாதனம் கொண்டு பாக்கெட்டுகளுக்கு ஒட்டு போடுவதை தவிர்க்க வேண்டும்.

பட்டாசு பரிசு பெட்டிகள் கடையில் தயாரிக்க கூடாது. பட்டாசு பரிசு பெட்டியில் எளிதில் உராய்வில் தீப்பிடிக்க கூடிய மத்தாப்பு பெட்டிகள், கேப் வெடிகள் இல்லாதவாறு பார்த்து வாங்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நிறுவனங் களின் பட்டாசுகளை மட்டுமே வாங்கவோ, விற்கவோ செய்ய வேண்டும்.

சட்ட விரோதமாக செய்த சரக்குகளையோ, சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பட்டாசுகளையோ வாங்குவதும், விற்பதும் கூடாது. இருப்பு பதிவேடு முறைப்படி எழுதி தினமும் பதிய வேண்டும். உதிரி பட்டாசுகளை கடையில் விற்பனைக் காகவோ, பார்வைக்காகவோ வைத்திருக்கக்கூடாது. 18 வயதிற்குட்பட்டவர்கள் தங்களுடன் பெரியவர்களை அழைத்து வந்தால் மட்டுமே பட்டாசு வழங்க வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும்.

அவசர கால வழியை அடைக்கும் அளவுக்கு பொருட்களை அடுக்கி வைப்பதையோ, சேமித்து வைப்பதையோ தவிர்க்க வேண்டும். இவ்வழி முழுவதுமாக திறந்து வைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story