கோரிக்கைகளை வலியுறுத்தி 8 இடங்களில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் 8 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக் கொடையாக ரூ.5 லட்சம், சமையலர் மற்றும் சமையல் உதவியாளருக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். உணவு தயாரிப்பு செலவின தொகையை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பெண் ஊழியர்களுக்கு 9 மாத மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம், 3 நாட்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத்தில் தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கடமலை- மயிலை, போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய 8 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன்பும் சத்துணவு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் அமுதா தலைமை தாங்கினார். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஞான.திருப்பதி, மாவட்ட செயலாளர் முகமது அலிஜின்னா மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கம்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் கம்பம் ஒன்றிய தலைவர் தவமணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், பொருளாளர் முருகன், மாவட்ட இணைச்செயலாளர் குமரன், மாவட்ட பிரதிநிதி முத்துலட்சுமி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கம்பம் கிளை செயலாளர் சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
உத்தமபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் மரியபுஷ்பம் தலைமையில் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். போடி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சங்க கிளை தலைவர் கருப்பழகு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கடமலை-மயிலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சத்துணவு ஊழியர்கள் சங்க ஒன்றிய தலைவர் ரவி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் நிழவழகன், ஒன்றிய செயலாளர் குமரன் மற்றும் கடமலை-மயிலை ஒன்றியத்தை சேர்ந்த சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story