ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி: கண்காணிப்பு கேமராவில் சிக்கிய நபரை பிடிக்க தேடுதல் வேட்டை


ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி: கண்காணிப்பு கேமராவில் சிக்கிய நபரை பிடிக்க தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 1 Nov 2018 9:45 PM GMT (Updated: 1 Nov 2018 7:37 PM GMT)

சிவகாசி அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்றவரின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள நிலையில், அந்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம்புதூரில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதியில் உள்ள இந்த ஏ.டி.எம். மையத்தில் எந்திரத்தை உடைத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளை முயற்சி நடைபெற்றது. ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாத நிலையில் கொள்ளையடிக்க வந்த நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் வங்கி அதிகாரிகளிடம் ஏ.டி.எம். மையத்தில் இருந்த எந்திரத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் யார்? என்று விசாரணை நடத்த தொடங்கினர். இதில் அந்த ஏ.டி.எம். மையத்தில் வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அப்போது கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களுக்கு முன்னர் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் ஏ.டி.எம். மையத்துக்குள் வந்து நோட்டமிட்டுவிட்டு பின்னர் சில நிமிடங்களில் வெளியே சென்றுவிடும் காட்சி பதிவாகி இருந்தது.

இதை தொடர்ந்து சில நிமிடங்களில் அதே வாலிபர் ஹெல்மெட் அணிந்தபடி மீண்டும் ஏ.டி.எம். மையத்துக்குள் வந்து கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட காட்சிகளும் பதிவாகி இருந்தது. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் அதற்கு தேவையான ஆயுதங்களை ஒரு பையில் எடுத்து வந்துள்ளார். மேலும் தன்னுடைய கைரேகை எங்கும் பதிவாகாமல் இருக்க கையுறையும் அணிந்து வந்துள்ளார்.

இந்த காட்சிகளை வைத்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பழைய குற்றவாளிகளின் புகைப்படத்துடன், ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் பணி விருதுநகரில் உள்ள மாவட்ட குற்றப்பதிவேட்டு கூடத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் அந்த வாலிபரின் புகைப்படத்தை வைத்து அவனை தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

Next Story