சென்னையில் இருந்து திண்டிவனம் வந்த இளம்பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.40 ஆயிரம் அபேஸ் - மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
சென்னையில் இருந்து திண்டிவனம் வந்த இளம்பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.40 ஆயிரத்தை அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டிவனம்,
சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி புஷ்பா (வயது 26). இவருடைய உறவினர்கள், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள விழுக்கம் பள்ளிக்குளத்தில் வசித்து வருகிறார்கள். சமீபத்தில் உறவினர் இறந்ததால், துக்கம் விசாரிப்பதற்காக புஷ்பா, நேற்று முன்தினம் சென்னையில் இருந்து திண்டிவனத்துக்கு வந்தார். பின்னர் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி நோக்கி சென்ற தனியார் பஸ்சில் அவர் ஏறினார். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் புஷ்பா தனது பர்சை, பையில் வைத்தார். பஸ் சிறிது தூரம் சென்றதும் பையை பார்த்தபோது, அதில் இருந்த பர்சை காணவில்லை. கூட்டநெரிசலை பயன்படுத்தி அதனை மர்மநபர் திருடிச்சென்றது தெரியவந்தது.
அந்த பர்சில் ரூ.9 ஆயிரத்து 750 மற்றும் ஏ.டி.எம். கார்டு இருந்தது. அந்த ஏ.டி.எம். கார்டிலேயே ரகசிய எண்ணையும் புஷ்பா எழுதி வைத்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது பற்றி உடனடியாக விநாயகமூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். மேலும், வங்கிக்கு சென்று அந்த ஏ.டி.எம். கார்டில் இருந்து பணம் எடுக்காத வகையில், அதிகாரிகள் மூலம் நிறுத்துமாறு கூறினார். உடனே அவர், வங்கிக்கு சென்று பார்த்தபோது, புஷ்பாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்தை கூட்டேரிப்பட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் அந்த மர்மநபர் எடுத்திருப்பது தெரியவந்தது.
இது பற்றி புஷ்பா, திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து கூட்டேரிப்பட்டு ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மநபரின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று அந்த வீடியோவை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை திருடி, அதன் மூலம் ரூ.40 ஆயிரத்தை மர்மநபர் அபேஸ் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story