திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.10 லட்சம் பறிமுதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்கியது


திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.10 லட்சம் பறிமுதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்கியது
x
தினத்தந்தி 2 Nov 2018 4:45 AM IST (Updated: 2 Nov 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை வேங்கிக்காலில் மாவட்ட கலெக்டரின் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு வட்டார போக்குவரத்து அலுவலராக அறிவழகன், போக்குவரத்து ஆய்வாளராக ராம்குமார் மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த அலுவலகத்தின் மீது பல்வேறு புகார்கள் வந்ததன் அடிப்படையில் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் சிலர் அலுவலகத்தின் பின்பக்கத்தில் உள்ள சுற்று சுவரை தாண்டி குதித்து ஓடியதாக கூறப்படுகிறது. போலீசார் அலுவலகத்திற்குள் சென்றதும் உள்ளே இருந்து யாரும் வெளியே செல்ல முடியாத அளவிற்கு கதவுகள் மூடப்பட்டன.

இதையடுத்து வெளியே சென்று இருந்த போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமாரை போலீசார் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலரின் காரை போலீசார் சோதனை செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோதனை மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதையடுத்து போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார் கூறுகையில், ‘இந்த சோதனையில், அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது’ என்றார்.


Next Story