ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.45 ஆயிரம் பறிமுதல்
ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி,
தமிழகத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலகங்களில் பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மதியம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். திருச்சியில் ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலகத்தில் நேற்று மதியம் 2.30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், நவநீதகிருஷ்ணன், அருள்ஜோதி தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக புகுந்தனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் பணியில் இருந்த ஊழியர்கள் பதறினர். சிலர் தாங்கள் வைத்திருந்த பணத்தை தூக்கி கீழே எறிந்தனர். சிலர் மேஜையின் கீழே வீசினர். இதனை கண்ட போலீசார் அந்த பணத்தை எல்லாம் கைப்பற்றினர். ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2 ஆயிரம் நோட்டுகள் என மொத்தம் ரூ.45 ஆயிரத்தை கைப்பற்றி பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
சோதனையின்போது வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குள் பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. அதேநேரம் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் யாரையும் வெளியே விடவில்லை. விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் கணக்கில் வராத பணம் என்பது தெரியவந்தது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. மேலும் அந்த பணத்தை சொந்தம் கொண்டாட யாரும் முன்வரவில்லை.
ஓட்டுனர் உரிமம் வழங்க மற்றும் புதுப்பித்தல் உள்பட பல்வேறு பணிகளுக்காக லஞ்சமாக பெற்ற பணமாக இருக்கலாம் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கருதினர். தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்த ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். நேற்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 8.30 மணி வரை 6 மணி நேரம் நடந்தது. இந்த சோதனையால் ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக ஊழியர்கள் யாரையும் கைது செய்யவில்லை. ஆனால் புரோக்கர்கள் 4 பேரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story