விழுப்புரம் அருகே: தண்ணீர் தொட்டியில் 4½ வயது சிறுவன் பிணம் - மாயமான தாய்க்கு போலீஸ் வலைவீச்சு


விழுப்புரம் அருகே: தண்ணீர் தொட்டியில் 4½ வயது சிறுவன் பிணம் - மாயமான தாய்க்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Nov 2018 3:30 AM IST (Updated: 2 Nov 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே தண்ணீர் தொட்டியில் 4½ வயது சிறுவன் பிணமாக மிதந்தான். மாயமான அவனது தாயை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வளவனூர், 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா காட்டுபுத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 35). இவர் புதுச்சேரி மாநிலம் வடமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயசித்ரா (30). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிகிறது. இவர்களுக்கு மிதுன் (4½) என்ற மகனும், லட்சன் என்ற 8 மாத கைக்குழந்தையும் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த கைக்குழந்தை ஒரு பாத்திரத்தில் தவறி விழுந்து அதிலிருந்த தண்ணீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகு காட்டுபுத்துப்பாளையத்தில் சிறிது நாட்கள் சிலம்பரசன் தனது மனைவி மற்றும் மகனுடன் தங்கியிருந்தார். அதன் பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கிருந்து விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே பனங்குப்பம் என்ற கிராமத்திற்கு வந்து ஒரு வாடகை வீடு எடுத்து தங்கினார். அதே கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மிதுனை எல்.கே.ஜி.யில் சேர்த்து சிலம்பரசன் படிக்க வைத்தார்.

இந்நிலையில் நேற்று காலை 5 மணியளவில் சிலம்பரசன் பனங்குப்பத்தில் இருந்து புறப்பட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் காலை 8 மணியளவில் தனது மகன் மிதுனை பள்ளிக்கு அனுப்பி வைப்பதற்காக சிலம்பரசன், தான் வேலை பார்த்து வரும் நிறுவனத்தில் இருந்து மனைவி ஜெயசித்ராவிற்கு போன் செய்துள்ளார்.ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பலமுறை போன் செய்தும் எடுக்காததால் உடனடியாக சிலம்பரசன் காட்டுபுத்துப்பாளையத்தில் உள்ள தனது பெற்றோர்களான கலியமூர்த்தி, மீனாட்சி ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு பனங்குப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கூறினார்.

இதையடுத்து கலியமூர்த்தியும், மீனாட்சியும் காட்டுபுத்துப்பாளையத்தில் இருந்து அவசர, அவசரமாக புறப்பட்டு பனங்குப்பத்திற்கு வந்தனர். அங்கு சிலம்பரசனின் வீட்டு கதவு திறந்து கிடந்தது. வீட்டில் ஜெயசித்ராவும் இல்லை. ஆனால் மிதுனின் புத்தகப்பை இருந்தது. உடனே பேரன் மிதுனை அவர்கள் இருவரும் தேடிப்பார்த்தனர்.

அப்போது வீட்டின் பின்புறமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் சிறுவன் மிதுன், பிணமாக மிதந்தான். இருப்பினும் இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக மிதுனை வளவனூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மிதுனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே மிதுன் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

இதையறிந்ததும் பேரக்குழந்தையின் உடலை பார்த்து கலியமூர்த்தி, மீனாட்சி ஆகியோர் கதறி அழுதனர். இதனிடையே தகவல் அறிந்து வந்த சிலம்பரசன், தனது மகனின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சிறுவன் மிதுனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிலம்பரசன், வளவனூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் ‘சந்தேக மரணம்’ என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் எப்படி இறந்தான் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சிறுவனின் தாய் ஜெயசித்ரா எங்கு இருக்கிறார்? என்ற விவரம் தெரியவில்லை. அவரை பிடித்து விசாரணை செய்தால்தான் சிறுவன், தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தது எப்படி? என்பது குறித்து தெரியவரும். எனவே ஜெயசித்ராவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story