வேலூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை: ‘ஆவின்’ பொதுமேலாளர் காரில் இருந்த ரூ.15 லட்சம் பறிமுதல்
வேலூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில் பொதுமேலாளர் காரில் இருந்த ரூ.11 லட்சம் உள்பட ரூ.14 லட்சத்து 85 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர்,
வேலூர்- திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்(ஆவின்) வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமேலாளராக (பொறுப்பு) பணியாற்றி வருபவர் கே.எஸ்.முரளிபிரசாத் (வயது 55). இவருக்கு கீழ் தொழில் நுட்ப அலுவலர்கள், எலக்ட்ரீசியன்கள், செயலர் (பொறியியல்) என 11 பேர் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு சம்பள நிலுவை தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. நிலுவை தொகைக்கான பணத்தில் முரளிபிரசாத் தனக்கு 35 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்று அவர்களிடம் தெரிவித்திருந்தார். இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளுக்கான நிலுவை தொகையில் முதல் கட்டமாக ரூ.44 லட்சம் 11 பேரின் வங்கிக்கணக்குக்கு நேற்றுமுன்தினம் சென்றது. அதற்கான கமிஷன் பணத்தை செயலர் (பொறியியல்) சேகர் என்பவர் 11 பேரிடமும் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்களில் 11 பேரிடமும் பணம் வசூல் செய்துள்ளார். இந்த லஞ்சப்பணம் பொது மேலாளர் அலுவலகத்தில் கைமாற உள்ளதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், இன்ஸ்பெக்டர்கள் விஜய், எஸ்.விஜயலட்சுமி, பி.விஜயலட்சுமி உள்பட போலீசார் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் ஆவின் அலுவலகத்திற்கு சென்றனர்.
அப்போது பொதுமேலாளர் முரளிபிரசாத் காரில் இருந்து வீட்டிற்கு செல்ல புறப்பட்டார். அவரை போலீசார் தடுத்து காரை சோதனை செய்தனர். காரில் ரூ.11 லட்சம் இருந்தது. அந்த பணத்தையும், சேகரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்தையும், அருகில் இருந்த தோட்டத்தில் அனாதையாக கிடந்த ரூ.1 லட்சத்தையும் என ரூ.14 லட்சத்து 85 ஆயிரம் ரொக்கப்பணத்தை வேலூர் மாவட்ட அலுவலர் ஆய்வு குழு அலுவலர் ஜோதி முன்னிலையில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து முரளிபிரசாத்தை அவரது அறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story