சொட்டுநீர் பாசன முறையில் கொய்யா சாகுபடி விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுரை


சொட்டுநீர் பாசன முறையில் கொய்யா சாகுபடி விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 2 Nov 2018 3:00 AM IST (Updated: 2 Nov 2018 4:21 AM IST)
t-max-icont-min-icon

சொட்டுநீர் பாசன முறையில் கொய்யா சாகுபடி செய்தால் விளைச்சலை அதிகரிக்கலாம் என்று விவசாயிகளுக்கு கலெக்டர் டி.ஜி.வினய் அறிவுறுத்தினார்.

பழனி,

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை சார்பில், கொய்யா பயிரிடும் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் குறித்த விழிப்புணர்வு முகாம் பழனியை அடுத்த ஆயக்குடி வாரச்சந்தை வளாகத்தில் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனிவாசன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

ஆயக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கொய்யா சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். கொய்யா சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன முறை ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்த முறையில் தண்ணீர் பாய்ச்சும் போது, மரங்களுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்கும். விளைச்சலும் அதிகரிக்கும்.

வறட்சி காலத்திலும் சொட்டுநீர் பாசன முறையில் கொய்யா விளைச்சலை அதிகப்படுத்தலாம். தற்போது சொட்டுநீர் பாசனத்துக்கு 100 சதவீதம் மானியம் அளிக்கப்படுகிறது. இதனை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆயக்குடி பகுதியில் மொத்தம் 447 ஏக்கர் நிலத்தில் கொய்யா சாகுபடி நடக்கிறது.

இதில், 211 ஏக்கரில் கொய்யா சாகுபடி செய்பவர்கள் ஏற்கனவே சொட்டுநீர் பாசன முறைக்கு மாறிவிட்டனர். தற்போது 126 ஏக்கர் நிலங்களில் சொட்டுநீர் பாசன முறையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையதளம் மூலம் செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு உடனடியாக மானியம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் விவசாயிகள் பேசும்போது, வேளாண் விற்பனை நிலையங்களில் விதை, உரம், பூச்சிமருந்து ஆகியவற்றுக்கான விலை, இருப்பு பட்டியல் குறித்த அறிவிப்பு பலகை இருக்கிறது. ஆனால் அதில் எந்த தகவலும் இடம்பெறுவதில்லை. இதனால் எங்களால் விதை, உரம் உள்ளிட்ட பொருட்களின் விலை மற்றும் இருப்பை தெரிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது.

மேலும் ஏற்கனவே சொட்டுநீர் பாசன முறைக்கு 75 சதவீதம் மானியம் என அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் எங்களுக்கு அந்த தொகை முறையாக கிடைக்கவில்லை. நிலத்தில் களைகள் அதிகம் இருப்பதால் பயிர் சாகுபடியில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே நிலப்போர்வை (மல்சிங் சீட்) பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம். சொட்டுநீர் பாசனத்துக்கு மானியம் வழங்கப்படுவது போல் நிலப்போர்வை வாங்கவும் அரசு மானியம் வழங்க வேண்டும் என்றனர்.

இதற்கு பதிலளித்து பேசிய கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் விவசாயிகளின் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முகாமில் பழனி சப்-கலெக்டர் அருண்ராஜ், தாசில்தார் ராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஆயக்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு சென்ற கலெக்டர், சொட்டுநீர் பாசன முறை குறித்து ஆய்வு செய்தார்.

Next Story