டெங்குகொசுப்புழு உற்பத்தி: தனியார் கட்டிட ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் மாவட்ட வருவாய் அதிகாரி நடவடிக்கை
டெங்குகொசுப்புழு உற்பத்தியாவதை கண்காணித்து தடுக்க தவறிய தனியார் கட்டிட ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மணிமண்டபம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகப்பகுதியில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர் டெங்குநோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வளாகத்தில் கிடந்த கட்டுமானத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பழைய டயர்களில் தண்ணீர் தேங்கியுள்ளதா? எனவும், தேங்கியிருந்த தண்ணீரில் டெங்கு கொசுப்புழுக்கள் இருக்கின்றனவா? எனவும் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது அந்த பகுதியில் கிடந்த பழைய டயரில் தேங்கியிருந்த தண்ணீரில் டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்த பழைய டயர்கள் மற்றும் கட்டுமான உபகரணங்களில் தேங்கியிருந்த தண்ணீரை கண்காணித்து அப்புறப்படுத்த தவறிய தனியார் கட்டிட ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டார். பின்னர் அபராத தொகையை தஞ்சை நகர்நல அலுவலர் நமச்சிவாயம் வசூல் செய்தார்.
இந்த ஆய்வின்போது தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் அருணகிரி, மாவட்ட மலேரியா அலுவலர் போத்திபிள்ளை, மற்றும் வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story