குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் - பெண்ணாடம் அருகே பரபரப்பு
பெண்ணாடம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அருகே உள்ள இறையூர் கக்கன் நகர் புதுகாலனி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கான மின்மோட்டார் திடீரென பழுதடைந்து போனதால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொது மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை சந்தித்து, பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யவேண்டும் என முறையிட்டனர். இருப்பினும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு இடையே அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு கால் கடுக்க நடந்து சென்று கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.
இந்தநிலையில் பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என புதுகாலனி பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை பொதுமக்கள் காலி குடங்களுடன் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்து தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளிடம் பேசி ஓரிரு நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story