ராமநகர் தொகுதியில் குமாரசாமி மனைவியை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் திடீர் விலகல்


ராமநகர் தொகுதியில் குமாரசாமி மனைவியை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் திடீர் விலகல்
x
தினத்தந்தி 2 Nov 2018 5:49 AM IST (Updated: 2 Nov 2018 5:49 AM IST)
t-max-icont-min-icon

ராமநகர் தொகுதியில் குமாரசாமி மனைவியை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் திடீரென்று விலகி காங்கிரசில் சேர்ந்தார். அவர் எடியூரப்பா மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் மண்டியா, பல்லாரி, சிவமொக்கா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளும், ராமநகர் மற்றும் ஜமகண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளும் காலியாக உள்ளன.

இந்த 5 தொகுதிகளுக்கும் நாளை (சனிக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. ராமநகர் தொகுதியில் கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் குமாரசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அவர் சென்னப்பட்டணா தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததால், ராமநகர் தொகுதியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

ராமநகர் தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் காங்கிரஸ் கட்சியின் மேல்-சபை உறுப்பினரான ராமநகர் மாவட்டத்தை சேர்ந்த லிங்கப்பாவின் மகனான எல்.சந்திரசேகர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். ஆனால் காங்கிரசில் இருந்து விலகிய அவர், கடந்த 3 வாரங்களுக்கு முன்பாக தான் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்திருந்தார்.

ராமநகர் தொகுதியில் எல்.சந்திரசேகர் தீவிர பிரசாரம் செய்தார். அவருக்கு ஆதரவாக ராமநகர் தொகுதியில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்த மத்திய மந்திரி சதானந்தகவுடா பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த தொகுதியில் அனிதா குமாரசாமிக்கும், எல்.சந்திரசேகருக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. இடைத்தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இந்த நிலையில், நேற்று காலையில் ராம நகர் தொகுதியின் பா.ஜனதா வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்த எல்.சந்திரசேகர் இடைத்தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று திடீரென்று அறிவித்தார்.

அத்துடன் பா.ஜனதாவில் இருந்து விலகுவதாகவும், காங்கிரசில் மீண்டும் சேருவதாகவும் எல்.சந்திரசேகர் தெரிவித்தார். மேலும் மந்திரி டி.கே.சிவக்குமாரின் சகோதரரும், எம்.பி.யுமான டி.கே.சுரேஷ் முன்னிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியில் மீண்டும் அவர் சேர்ந்தார். பின்னர் எல்.சந்திரசேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராமநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளராக நான் நிறுத்தப்பட்டு இருந்தேன். காங்கிரஸ் கட்சியில் இருந்து என்னை, பா.ஜனதாவின் மூத்த தலைவர் யோகேஷ்வர் தான் பா.ஜனதாவுக்கு அழைத்து வந்தார். ராமநகரில் போட்டியிடும் படியும், தேர்தலுக்கு ஆகும் செலவை தானே ஏற்பதாகவும், அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் யோகேஷ்வர் கூறினார். கூட்டணி ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்காது என்றும், பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் முக்கிய பொறுப்பு வழங்குவதாகவும் சொன்னார். அதனால் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தேன்.

ஆனால் ராமநகர் தொகுதியில் எனக்கு ஆதரவாக எடியூரப்பா, யோகேஷ்வர் உள்ளிட்ட யாரும் பிரசாரம் செய்ய வரவில்லை. எடியூரப்பா ராமநகர் தொகுதிக்கு ஒரு முறை கூட வந்து எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவில்லை. அவர் தனது மகன் ராகவேந்திரா போட்டியிடும் சிவமொக்கா தொகுதியிலேயே பிரசாரம் செய்து வருகிறார். எடியூரப்பாவை தொடர்பு கொண்டு பேச கூட முடியவில்லை. இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து பா.ஜனதாவுக்கு அழைத்து வந்த யோகேஷ்வர் கூட எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வரவில்லை. கடந்த 2 நாட்களாக அவரை தொடர்பு கொண்டு பேச கூட முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராமநகர் தொகுதியில் நான் வெற்றி பெற வாய்ப்பே இல்லை.

இதனால் தான் இடைத்தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறேன். பா.ஜனதா தலைவர்கள் மீதான அதிருப்தியால் இந்த முடிவை எடுத்துள்ளேன். நான் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன். அதனால் மீண்டும் காங்கிரசில் சேர்ந்துள்ளேன்.

இவ்வாறு எல்.சந்திரசேகர் கூறினார்.

ராமநகர் தொகுதியின் பா.ஜனதா வேட்பாளர் இடைத்தேர்தலில் இருந்து விலகி இருப்பதுடன், அவர் காங்கிரசில் சேர்ந்துள்ளதால், அந்த தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளரான முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. ராமநகர் தொகுதியில் தனது மனைவிக்காக நேற்று குமாரசாமி பிரசாரம் செய்ய இருந்தார். ஆனால் அனிதாவின் வெற்றி உறுதியானதால், அவர் பிரசாரம் செய்யவில்லை.

இந்த நிலையில், எல்.சந்திரசேகரை காங்கிரஸ் கட்சியினர் விலைக்கு வாங்கி விட்டதாக பா.ஜனதா தலைவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இடைத்தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ள நிலையில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியில் இருந்து விலகி இருப்பது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பா.ஜனதாவுக்கு பெரும் பின்னடைவையும், அக்கட்சியின் தலைவர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையில், எல்.சந்திரசேகர் இடைத்தேர்தல் போட்டியில் இருந்து விலகியதுடன், அவர் காங்கிரசில் சேர்ந்ததால் நேற்று காலையில் ராமநகர் மாவட்ட பா.ஜனதா அலுவலகம் முன்பாக, அக்கட்சியின் தொண்டர்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், எல்.சந்திரசேகருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு எதிராக கோஷங் களை எழுப்பினார்கள்.

அத்துடன் எல்.சந்திரசேகரின் உருவப்படங்களையும், அவரது உருவ பொம்மையையும் தீவைத்து எரித்து தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள். மேலும் எல்.சந்திரசேகரின் உருவப்படத்தை பா.ஜனதா தொண்டர்கள் செருப்பால் அடித்தனர். இந்த சம்பவத்தால் பா.ஜனதா அலுவலகம் முன்பு பரபரப்பு உண்டானது. 

Next Story