பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் மிதமான மழை தீபாவளி விற்பனை பாதிப்பு
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. இதனால், தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர்,
தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில் வடகிழக்கு பருவமழை கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. ஆனால், நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. நேற்று தான் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன்காரணமாக நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், காலை 6 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் அவ்வப்போது விட்டு, விட்டு பெய்தது.
இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்று மாணவ-மாணவிகள் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே சிரமத்துடன் பள்ளிகளுக்கு சென்றதை காண முடிந்தது.
வேலைக்கு சென்றவர்கள் குடை பிடித்தவாறு நடந்து சென்றனர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழைகோட்டு அணிந்து சென்றனர்.
தீபாவளிக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ளதால் ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்க பெரம்பலூர் கடைவீதிக்கு பொதுமக்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். ஆனால், விட்டு விட்டு மழை பெய்ததால் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். இதனால், தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டது. தரைக்கடை வியாபாரிகள் பெரிய பிளாஸ்டிக் கவர்களால் தங்களது கடைகளை மூடி வைத்திருந்தனர். அவ்வப்போது மழை நின்றதும் கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர்.
மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம்போல் மழைநீர் தேங்கி நின்றது. பெரும்பாலான சாக்கடைகள் தூர்வாரப்படாததால் கழிவுபொருட்கள் அடைத்து கொண்டு நின்றதால் மழைநீர் செல்ல முடியவில்லை. இதனால், சாலைகளில் மழை நீரோடு, சாக்கடையும் கலந்து கருப்பு நிறத்தில் ஓடியது.
இதனால், சாலைகளில் கால் வைக்கவே பொதுமக்கள் சிரமப்பட்டனர். பெரம்பலூரில் நேற்று காலை முதல் மாலை வரை விட்டு, விட்டு மிதமான மழை பெய்து கொண்டே இருந்ததால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய தாலுகா பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
Related Tags :
Next Story