திருவாரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 128.4 மி.மீட்டர் பதிவானது


திருவாரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 128.4 மி.மீட்டர் பதிவானது
x
தினத்தந்தி 2 Nov 2018 11:00 PM GMT (Updated: 2 Nov 2018 5:38 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. இதில் திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 128.4 மி.மீட்டர் பதிவானது.

திருவாரூர், 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. இதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. நேற்று 2-வது நாளாக திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் மாணவ, மாணவிகள் நலன் கருதி பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை விட்டது.

திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, நன்னிலம், குடவாசல், வலங்கைமான் என மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. வாகன ஓட்டிகளும், வாகனத்தை இயக்க முடியாமல் சிரமப்பட்டனர். அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 128.4 மி.மீட்டர் மழை பதிவாகியது.

சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெய்து வரும் மழையினால் மகிழ்ச்சி அடைந்தாலும், இந்த மழை தொடர்ந்தால் வயல்களில் தண்ணீர் தேங்கி நெற் பயிர்கள் பாதிப்படையும் என கவலை அடைந்துள்ளனர்.

திருவாரூர்மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டர் வருமாறு:-

திருவாரூர்-78.2, நன்னிலம்-73.4, குடவாசல்-44.8, வலங்கைமான்-36.4, மன்னார்குடி-25, நீடாமங்கலம்-20.2, திருத்துறைப்பூண்டியில் 128.4, முத்துப்பேட்டை 32, பாண்டவையாறு தலைப்பு-38.8 என மொத்தம் 477.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

Next Story