தீபாவளி பண்டிகையையொட்டி குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை


தீபாவளி பண்டிகையையொட்டி குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 3 Nov 2018 4:30 AM IST (Updated: 3 Nov 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது.

குருபரப்பள்ளி, 
தீபாவளி பண்டிகை வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை அன்று பெரும்பாலானோர் ஆடு, கோழி இறைச்சிகளை உண்பது வழக்கம். இதனால் பண்டிகையையொட்டி, சந்தைகளில் ஆடு, கோழிகள் விற்பனை அதிகமாக இருக்கும்.

அதன்படி குந்தராப்பள்ளி கிராமத்தில் நடந்த வாரசந்தையில் வழக்கத்தை விட ஆடு, கோழிகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. ஆடுகளை விற்கவும், வாங்கி செல்வும் விவசாயிகள், வியாபாரிகளும், பொதுமக்களும் அதிக அளவில் வந்தனர். குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் சந்தைக்கு வந்திருந்தனர்.

ஆடுகள் வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு விற்பனையானதால், இறைச்சி கடைகளில் ஆட்டுக்கறி விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது:-

வரும் தீபாவளி பண்டிகைக்காக ஆடுகள் வாங்க ஆயிரக்கணக்கான வியாபாரிகள் காலை முதலே குவிந்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.3 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகும். நேற்று 10 கிலோ கொண்ட ஆடு ரூ.5 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது.

அதிகப்பட்சம் ஒரு ஜோடி ஆடுகள் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது. இதன் மூலம் சுமார் ரூ.7 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதே போல நாட்டுக்கோழிகள் விற்பனையும் அதிகமாக காணப்பட்டது.

Next Story