குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு


குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு
x
தினத்தந்தி 3 Nov 2018 4:00 AM IST (Updated: 3 Nov 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையம் அருகே, நகைச்சுவை நடிகர் வடிவேலு சினிமா பட காமெடி பாணியில், காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிபாளையம், 

தமிழ் நகைச்சுவை நடிகர் வடிவேல் நடித்த “கண்ணும் கண்ணும்” என்ற சினிமா படத்தில் அவர் கிணற்றை காணவில்லை என்றும், அதை கண்டு பிடித்து தருமாறும் போலீசில் ஒரு புகார் கொடுத்து இருப்பார். அதன் பேரில் போலீசார் மற்றும் அதிகாரிகள் வந்து கிணறு இருந்த இடத்தை பார்வையிடுவது போன்று காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இந்த நகைச்சுவை அனைவரின் வரவேற்பையும் பெற்றது.

அதேபோல குமாரபாளையம் அருகே வாய்க்காலை காணவில்லை என்றும், அதை கண்டு பிடித்து தருமாறும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் விவரம் வருமாறு:-

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் அக்ரஹாரம் வாய்க்கால் கரடு பகுதியை சேர்ந்தவர் ஆதவன் என்ற ஆறுமுகம். தமிழக தேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளரான இவர் குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்துக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நான் 30 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறேன். இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் பெருமாள் மலையில் இருந்து கொல்லப்பாளையத்தூர் தோட்டம், வாய்க்கால்காடு, லட்சுமி நகர் வழியாக 2 கிலோ மீட்டர் நீளத்திற்கும், 30 அடி அகலத்திற்கும் விவசாய பாசனத்திற்காக வாய்க்கால் இருந்தது. அப்போது நாங்கள் வாய்க்காலில்தான் மீன் பிடித்து, குளித்து விளையாடுவோம். பின்னர் எங்களுக்கு வயதானதால் நாங்கள் தொழில், குடும்பம் என கவனம் செலுத்தியதால் வாய்க்காலில் குளிப்பதை நிறுத்தி விட்டோம்.

இந்த நிலையில் எனது குழந்தைகளை குளிக்க வைக்க அந்த வாய்க்காலை தேடி சென்றோம். நானும் பல இடங்களில் தேடி பார்த்து விட்டேன். வாய்க்கால் 1 அடி அகலம் கூட காணவில்லை. இந்த வாய்க்காலை யாரோ சமூக விரோதிகள் திருடி சென்று விட்டார்கள் என கருதுகிறேன். இந்த வாய்க்கால் வருவாய் துறைக்கு சம்பந்தமானது என்பதால், வாய்க்கால் திருட்டு சம்பந்தமாக போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுக்க முடியாது. எனவே இந்த வாய்க்காலை கண்டு பிடித்து பொது பயன்பாட்டிற்கு தருமாறும், வாய்க்கால் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவின் நகல் தமிழக முதல்-அமைச்சர், உயர்நீதிமன்ற பதிவாளர், சென்னை நீர்வள ஆதாரத்துறை, நாமக்கல் மாவட்ட கலெக்டர், திருச்செங்கோடு உதவி கலெக்டர், பள்ளிபாளையம் அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

Next Story