சேலம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 4½ வயது சிறுவன் சாவு ஆரம்ப சுகாதார நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை
சேலம் இளம்பிள்ளை அருகே மர்ம காய்ச்சலுக்கு 4½ வயது சிறுவன் இறந்தான். இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
இளம்பிள்ளை,
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை கே.கே.நகரை சேர்ந்தவர் செல்வம். விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி சந்திரா. இவர்களுக்கு லத்திகா (வயது 12), அஜய் (9), ரோகித் (4½) ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில் ரோகித்துக்கு கடந்த 27-ந் தேதி முதல் மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள இ.காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் 29-ந் தேதி மீண்டும் வர தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் அங்கு செல்லாமல் இடங்கணசாலை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே காய்ச்சல் தீவிரமானதால் ரோகித்தை, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி, ரோகித் பரிதாபமாக உயிரிழந்தான்.
மர்ம காய்ச்சலால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே லத்திகா, அஜய் ஆகியோருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரோகித்துக்கு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, இ.காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், இடங்கணசாலை பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் டாக்டர்கள், போலீசார் அங்கு சென்று, முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது டாக்டர்கள் கூறும் போது, சிறுவன் ரோகித்துக்கு தொண்டைஅடைப்பான் டிப்தீரியா என்ற காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் தான் அவன் உயிரிழந்தான் என்று விளக்கம் அளித்தனர். இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
மேலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதியில் சுகாதார பணியை மேற்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story