திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சிலைகள் ஆய்வு பணியை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பார்வையிட்டார்
திருவாரூர் தியாக ராஜர் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் நடைபெற்று வரும் சிலைகள் ஆய்வு பணியை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் பார்வையிட்டார்.
திருவாரூர்,
ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் தமிழகத்தில் கோவில் களில் உள்ள சிலைகளின் தொன்மை மற்றும் ஐம்பொன் சிலைகள் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 625 கோவில்களில் உள்ள 4,635 சிலைகளை கடந்த அக்டோபர் 21-ந் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். 2 நாட்களில் 146 சிலைகளை ஆய்வு செய்த இந்த குழுவினர் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
இந்தநிலையில் மீண்டும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் சிலைகளை ஆய்வு செய்யும் பணி 2-ம் கட்டமாக நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்றும் இந்த ஆய்வுப்பணி தொடர்ந்தது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மலைச்சாமி, பழனிசெல்வம் ஆகியோர் தலைமையில் தொல்லியல் துறையினர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் என 50-க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆய்வுப்பணியை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் நேற்று பார்வையிட்டார்.
இந்த ஆய்வுப்பணியின்போது பேரளம் அருகே உள்ள திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் கோவில் அர்ச்சகர் சோமசுந்தரம் தியாகராஜர் கோவிலுக்கு வந்து ஐ.ஜி.பொன்மாணிக்கவேலை சந்திக்க முயன்றார். அப்போது அவரிடம் நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? என்று ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கேட்டார். அதற்கு கோவில் அர்ச்சகர், தங்கள் கோவிலுக்கு சொந்தமான 24 சிலைகள், இந்த பாதுகாப்பு மையத்தில் உள்ளது என்றும், இந்த சிலைகளை சரிபார்க்க வருமாறு அழைத்ததின் பேரில் தியாகராஜர் கோவிலுக்கு வந்ததாகவும் கூறினார்.
அதை கேட்ட ஐ.ஜி.பொன்மாணிக்கவேல், நீங்கள் மட்டும் வருவது சரியாக இருக்காது. கிராம மக்களில் சிலரை அழைத்து வர வேண்டும். கிராமத்தில் உள்ளவர்களுக்கு தான் சாமி சிலையின் உண்மைத்தன்மை தெரியும் என கூறினார். இதைத்தொடர்ந்து கோவில் அர்ச்சகர் அங்கிருந்து சென்றார்.
Related Tags :
Next Story