நெல்லை அருகே கோர விபத்து: அரசு பெண் அதிகாரி உள்பட 3 பேர் பலி மொபட்டில் மோதிய கார் மீது லாரி மோதியது


நெல்லை அருகே கோர விபத்து: அரசு பெண் அதிகாரி உள்பட 3 பேர் பலி மொபட்டில் மோதிய கார் மீது லாரி மோதியது
x
தினத்தந்தி 3 Nov 2018 5:00 AM IST (Updated: 3 Nov 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே மொபட்டில் மோதிய கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் அரசு பெண் அதிகாரி உள்பட 3 பேர் பலியானார்கள்.

நாங்குநேரி,

நெல்லை அருகே உள்ள மூன்றடைப்பு பகுதி கருப்புகட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஈசாக் (வயது 70), ஆடு வியாபாரி. இவர் நேற்று காலை வள்ளியூர் சந்தைக்கு சென்று ஆடு ஒன்றை வாங்கினார். பின்னர் ஒரு பெட்டிக்குள் ஆட்டை வைத்து, அதை தனது மொபட்டில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

நாங்குநேரியை கடந்து மூன்றடைப்பு 4 வழிச்சாலையில் கருப்புகட்டி ஊருக்கு செல்லும் சர்வீஸ் ரோட்டுக்கு செல்வதற்காக அவர் மொபட்டை திருப்பினார். அங்கு ரோட்டை கடக்க முயன்றார்.

அப்போது நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த கார், ரோட்டை கடக்க முயன்ற ஈசாக்கின் மொபட்டில் மோதியது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீது ஏறி எதிரே வாகனங்கள் வரக்கூடிய ரோட்டுக்கு பாய்ந்து சென்றது. அப்போது நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு வாழைத்தார்கள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது.

அந்த லாரி மின்னல் வேகத்தில் கார் மீது மோதியது. உடனே லாரி டிரைவர் வேகமாக பிரேக் அடித்து லாரியை நிறுத்த முயற்சி செய்ததால் அந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. ரோடு முழுவதும் வாழைத்தார்கள் சிதறி கிடந்தன. காரும் அருகில் உள்ள பள்ளத்துக்குள் உருண்டு சென்று விழுந்தது.

இந்த கோர விபத்தில் மொபட்டில் ஆட்டுடன் பயணம் செய்த ஈசாக் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். கார் டிரைவரான குமரி மாவட்டம் பனிக்கன்குடியிருப்பை சேர்ந்த பாப்புலர் (42), காரில் பயணம் செய்த குமரி மாவட்டம் கோட்டாறு பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் (53) ஆகியோர் இடிபாட்டுக்குள் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

இறந்த பேச்சியம்மாள் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று நாகர்கோவிலில் இருந்து வேலைக்கு காரில் வந்தபோது விபத்தில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். லாரி டிரைவரான வள்ளியூர் அருகே உள்ள சிறுவாஞ்சியை சேர்ந்த காமராஜ் (55) காயம் அடைந்தார். ஈசாக் மொபட்டில் வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் கட்டியிருந்த ஆடு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

விபத்து பற்றி தகவல் அறிந்த மூன்றடைப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் நாங்குநேரி தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை மீட்புக்குழுவினர் விபத்து நடந்த இடத்துக்கு வந்து ரோட்டில் கவிழ்ந்து கிடந்த லாரியை கிரேன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தி சாலையோரமாக நிறுத்தினர். ரோடு முழுவதும் சிதறி கிடந்த வாழைத்தார்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். மூன்றடைப்பு போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story